×

வாட்ஸ்ஆப், ஸூம், கூகிள் டியோவுக்கு உரிமம் பெறுவது கட்டாயம்: ஒன்றிய அரசின் புதிய மசோதா

டெல்லி: இணையவழி தொலைபேசி சேவை வழங்கும் வாட்ஸ்ஆப், ஸூம், கூகிள் டியோ போன்ற செயலிகள் இந்தியாவில் இயங்குவதற்கு உரிமம் பெறவேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. புதிய தொலைத்தொடர்பு மசோதா 2022-ஐ உருவாக்கியுள்ள ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சகம் அதனை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு மசோதாவில் தொலைத்தொடர்பு சேவையில் OTT சேவை இணைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இணைய அழைப்பு மற்றும் செய்தி அனுப்பும் சேவைகளை வழங்கி வரும் OTT நிறுவனங்கள் இனி இந்தியாவில் செயல்பட உரிமம் பெற்றாக வேண்டும்.

இதனால், பெரும் எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப், ஸூம், கூகிள் டியோ ஆகிய செயலிகளை உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களோ அல்லது இணைய சேவை நிறுவனங்களோ உரிமத்தை ஒப்படைத்தால் அவற்றுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும். நிறுவனங்களுக்கு நுழைவு கட்டணம், உரிம கட்டணம், பதிவு கட்டணம், அபராதம், கூடுதல் கட்டணம், வட்டி ஆகிவற்றை பகுதி அளவுக்கு அல்லது முழுமையாகவோ தள்ளுபடி செய்யவோ மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், இந்தியாவில் வெளியிடுவதற்காக அளிக்கும் பத்திரிகை செய்திகளுக்கு, இடைமறித்து ஆய்வு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால், தேச பாதுகாப்பு, பொது பாதுகாப்பு, இறையாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த விலக்கு பொருந்தாது என்று தொலைத்தொடர்பு மசோதா 2022-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா குறித்து வரும் அக்டோபர் 20-ம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : WhatsApp ,Union govt , WhatsApp, Zoom, Google Duo, License, Mandatory, Union, Government, New, Bill
× RELATED நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் தகவல்...