அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு..!!

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், செப்டம்பர் 26 அல்லது 27ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியா தற்போதுள்ள சூழலில் எதிர்க்கட்சிகள் வலிமையுடன் இருக்க வேண்டியது அவசியம். சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் தலைவராக வரக்கூடாது என்பதில் ராகுல் உறுதியாக இருக்கிறார்.

எனவேதான், காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்குமாறு பலமுறை வலியுறுத்தியும் வேண்டாமென்று ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அசோக் கெலாட் தகவல் தெரிவித்துள்ளார். 24 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சி தலைவராக வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் முதலமைச்சர் பதவியை அசோக் கெலாட் விரைவில் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவை எதிர்கொள்ள அலோக் கெலாட்தான் பொருத்தமானவர் என சோனியா, ராகுல் காந்தி விரும்பியதை அடுத்து தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடவுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்:

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதன்பின்னர் அவரை தலைவர் பதவியில் அமர்த்த மூத்த தலைவர்கள் முயற்சி செய்தும் அவர் ஏற்கவில்லை. கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். நிரந்தர தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பதற்கு கட்சியினர் மீண்டும் ஆர்வம் காட்டினர்.

ஆனால் அவர் தலைமை பதவியை ஏற்க முன்வராத நிலையில், தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வருகிற அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 19ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.