4வது மண்டல குழு கூட்டம் 74 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி 4வது மண்டலத்துக்கு உட்பட்ட ஆர்.கே.நகர், பெரம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மற்றும் புதிதாக திட்டம் கொண்டு வருவது குறித்த மண்டல குழு கூட்டம் தண்டையார்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமை வகித்தார். இதில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்துகொண்டு தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்னைகளை எடுத்து கூறினர். இதையடுத்து, மண்டல குழு தலைவர் மற்றும் அதிகாரிகள் கவுன்சிலர்கள் கோரிக்கயை நிறைவேற்றுவதாக கூறினர்.

கூட்டத்தில், ரூ.5 கோடியே 85 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், புதிய அங்கன்வாடி மையம் கட்டுவது, முக்கிய இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிவறை, வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் கேப்டன் காட்டன் கால்வாய் சுற்றுச்சுவர், வியாசர்படி எஸ்ஏ காலனியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் நவின உபகரணங்கள் வழங்குதல், வார்டுகளில் உள்ள பூங்காக்கள் பராமரிப்பது, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனைக்கு புதிதாக ஜெனரேட்டர், சாலைகளில் குப்பையை சேகரிக்க குப்பை தொட்டிகள், கொருக்குப்பேட்டை சிகரந்தபாளையத்தில் காலை சிற்றுண்டி தயார் செய்யும் இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள், மண்டல அதிகாரி மதிவாணன், மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வாரிய அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், மின்வாரிய துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: