ராக்கெட்ரி ஆஸ்கருக்கு போகாதது வருத்தமா? மாதவன் பதில்

சென்னை: ராக்கெட்ரி படத்தை ஆஸ்கருக்கு அனுப்பாதது வருத்தமா என்பதற்கு நடிகர் மாதவன் பதிலளித்தார். இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு உருவான படம் ராக்கெட்ரி எ நம்பி எபெக்ட். இந்த படத்தில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடித்தார். அவரே படத்தையும் இயக்கினார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் இந்த படம் வெளியானது. இந்நிலையில் மாதவன் கூறியது: எல்லா இயக்குனர்களுக்கும் தங்களது படம் வாழ்க்கையில் முக்கியமானது. அதிலும் முதல் படம் என்றால் தனி பிரியம் இருக்கும். ராக்கெட்ரி எனது முதல் டைரக்‌ஷன் படம். அதனால் விருது கிடைக்கும் என விரும்புவது யதார்த்தம்.

அந்த வகையில் நானும் ஆஸ்கரை ஆசைப்பட்டேன். அந்த வாய்ப்பு குஜராத்தி படமான செல்லோ ஷோவுக்கு கிடைத்திருக்கிறது. அந்த படக்குழுவுக்கு வாழ்த்துகள்.ராக்கெட்ரி படத்துக்கு இதைவிட சிறப்பான கவுரவம், இந்தியாவிலேயே கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. அதற்காக மனம் தளரவில்லை. ஆஸ்கர் என்பது மேற்கத்திய நாடுகளுக்கான உயரிய விருதாகும். இதனால் அந்த விருது பெறும் கலைஞர்கள், அந்தஸ்திலும் வருமானத்திலும் தொழிலிலும் முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்திய கலைஞர்களை பொறுத்தவரை அது பெரிய கவுரவம் என்பதுதான் உண்மை. இவ்வாறு மாதவன்  கூறினார்.

Related Stories: