×

சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் ரத்து: பஞ்சாப் ஆளுநர் மீது முதல்வர் மான் வழக்கு

சண்டிகர்: பஞ்சாப் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை ரத்து செய்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் பகவந்த் மான் கூறியுள்ளார். பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி, ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க 10 ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்களை இழுக்க, பாஜ தலா ரூ.25 கோடி பேரம் பேசியதாக இக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி இருந்தார். இதன் காரணமாக, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர போவதாக ஆம் ஆத்மி அறிவித்தது.

இதற்காக, பஞ்சாப் சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்பு கூட்டம் நேற்று கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவையை கூட்டுவதற்கான தனது உத்தரவை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் மாலை திடீரென ரத்து செய்தார். இந்நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நேற்று நடந்தது. பின்னர், மான் அளித்த பேட்டியில், ‘அமைச்சரவை கூட்டத்தில் சட்டப்பேரவையின் கூட்டத் தொடரை செப்டம்பர் 27ம் தேதி கூட்ட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை ஆளுநர் ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்,’ என்று தெரிவித்தார்.

Tags : Chief Mann ,Governor of Punjab , Chief Minister Mann's case against Punjab Governor for cancellation of special assembly meeting
× RELATED மாநில சட்டப்பேரவையை கூட்டுவதற்கே...