×

ரயில்நிலையத்தில் மகள் சுவாதி கொலை ரூ.3 கோடி இழப்பீடு கோரி தாய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சிவில் நீதிமன்றத்தை அணுக உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த 2016ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராம்குமார் என்கிற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மகள் சுவாதி இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி தாய் ரங்கநாயகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையின் அலட்சியம் காரணமாகவே சுவாதி கொலை செய்யப்பட்டார். எனவே ரயில்வே நிர்வாகம் தரப்பில் இழப்பீடாக 3 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கி வருகிறது. சுவாதி கொலை திட்டமிட்ட சம்பவம் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இழப்பீடு கோரி சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று அறிவுறுத்தி, இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Swathi , Mother's case seeking compensation of Rs 3 crore for daughter Swathi's murder at railway station dismissed: High court advises to approach civil court
× RELATED கர்நாடகாவில் காஸ் கசிந்து தம்பதி 2 மகள்கள் உயிரிழப்பு