40% கமிஷன் ; 10% கமிஷன் காங்., பாஜ போட்டி போராட்டம்: கர்நாடக மேலவையில் பரபரப்பு

பெங்களூரு: அரசு ஒப்பந்த பணியில் பாஜ அரசின் 40% கமிஷன் தொடர்பாக சர்ச்சையை எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர்கள், மேலவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டதால் கூச்சல் குழப்பத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக சட்ட மேலவை நேற்று காலை தொடங்கியது. மேலவை தலைவர் ரகுநாத் ராவ் மல்காபுரே அவையில் நுழைந்ததுமே, எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆளும்கட்சி உறுப்பினர்களும் பே-சிஎம் மற்றும் சித்தராமையா, டிகே சிவகுமார் பேனர்களை வைத்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் 10 நிமிடம் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் காங்கிரஸ், பாஜவினர் கூச்சல் எழுப்பினர். அமளிக்கு இடையே கேள்வி பதில் நேரம் எடுத்துக்கொள்வதாக அவை தலைவர் அறிவித்தார்.

அப்போது, எதிர்க்கட்சி தலைவர் பிகே ஹரிபிரசாத், காங்., உறுப்பினர்கள் பிஆர் ரமேஷ், தினேஷ், எஸ்.ரவி உள்ளிட்டோர் மேலவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கு பாஜ உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜ உறுப்பினர் ரவிக்குமார், செலுவாதி நாராயணசாமி உள்ளிட்டோர் கைகளில் பேனர்களை ஏந்தி 10 சதவீத கமிஷன் காங்கிரஸ் என தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மேலவை தலைவர் ரகுநாத் ராவ் மல்காபுரே, அவையை ஒத்தி வைத்து விட்டு வெளியேறினார். மேலவை ஒத்தி வைக்கப்பட்ட பிறகும் காங்கிரஸ் மற்றும் பாஜவினர் கையில் பதாகைகளுடன் அவையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

* `பே சிஎம்’ அல்ல `பே டீம்’

ஆம் ஆத்மி கட்சி சமூக வளைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், `பே சிஎம்’ 40 சதவீதம், `பே எக்ஸ் சிஎம்’ 20 சதவீதம், மஜத 10 சதவீதம் கமிஷன், ஒப்பந்ததாரர்கள் 30 சதவீதம், இதனால் மக்களுக்கு நாமம் என்று கேலி சித்திரம் மூலம் கிண்டல் பதிவை வெளியிட்டுள்ளது. மூன்று கட்சிகளுக்கும் கமிஷன் கொடுக்க கியூஆர் கோட் எண்ணையும் குறிப்பிட்டுள்ளது. ஆம் அத்மி கட்சியின் கிண்டல் போஸ்ட் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: