×

முதல்வரை அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டிய தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை உதவியாளர் கைது: வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை

சென்னை: தமிழக முதல்வரை அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டிய தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வட சென்னை பகுதியில் கடந்த 11ம் தேதி, பல்வேறு தெருக்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிகை பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி 5வது மண்டல உதவி பொறியாளர் ராஜ்குமார், பிலிப்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி, எச்சரித்து அனுப்பி உள்ளார். எனினும் பிலிப்ராஜ் அதே பணியை தொடர்ந்து செய்ததால், எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகர் என்பவரும் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவதூறு போஸ்டர் ஒட்டிய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிலிப்ராஜை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, இந்து ஜனநாயக முன்னணியின் சென்னை மாநகரச் செயலாளர் சத்தியநாதன் தான் போஸ்டர்களை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சத்தியநாதனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சத்தியநாதனிடம் விசாரணை மேற்கொண்டதில் பறையர் பேரியக்க தலைவர் சிவகுருநாதன் என்பவர் போஸ்டர்களை சென்னையில் ஒட்ட கொடுத்தது தெரியவந்துள்ளது.

போஸ்டரை ஒட்ட கொடுத்த சிவகுருநாதனையும் போலீசார் கைது செய்தனர். முதல்வரை அவதூறாக சித்தரித்து சிவகாசியில் தனியார் அச்சகத்தில் 5,000 போஸ்டர்களை சிவகுருநாதன் அச்சடித்து கொரியர் மூலம் சென்னை கொண்டு வந்து, வழக்கறிஞர்கள் இருவர் மூலம் சத்தியநாதன் மற்றும் பிலிப்ராஜ் ஆகியோரை வைத்து சென்னையில் சுவரொட்டிகளை ஒட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதுபோன்று அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டுமாறு கூறிய நபர் யார் என கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

குறிப்பாக தனியார் பத்திரிகையில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பற்றி கார்ட்டூன் சித்திரம் வெளியானது போல், கிருஷ்ணகுமார் முருகன் தமிழக முதல்வரையும் பற்றி அவதூறு பரப்பும் வகையில் வாசகம் மற்றும் கார்ட்டூன்களை சித்தரித்து சிவகுருநாதனுக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதற்காக 35 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சிவகுருநாதனுக்கு கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே சிவகுருநாதன், சத்தியநாதன், பிலிப் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த பாஜ ஆதரவாளரும், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் உதவியாளருமான கிருஷ்ணகுமார் முருகனை போலீசார் நேற்று கைது செய்தனர். கிருஷ்ணகுமார் முருகனை அடையாறில் அவர் நடத்திவரும் அரசியல் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். தமிழக முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டப்பட்ட விவகாரத்தில் இன்னும் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Tamil ,Nadu ,BJP ,Annamalai ,Chief Minister , Tamil Nadu BJP chief Annamalai's aide arrested for putting up a poster defaming the Chief Minister: Police investigating whether anyone else is involved
× RELATED ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?… தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்