உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பேற்றார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கடந்த 12ம் தேதி ஓய்வு பெற்றதையடுத்து நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அவரும் கடந்த 21ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு நீதிபதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

நீதிபதி டி.ராஜா மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் கடந்த 1961ல் பிறந்தார். மதுரை அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து கடந்த 1988ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். மூத்த வழக்கறிஞர் சி.செல்வராஜிடம் ஜூனியராக பணியை தொடங்கிய ராஜா பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்தார். சிவில், கிரிமினல், அரசியல் சாசன வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான ராஜா, கடந்த 2008ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராக பணியாற்றினார். கடந்த 2009 மார்ச் மாதம் 31 தேதி சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2011ல் நிரந்தரம் செய்யப்பட்டார்.

Related Stories: