தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை மருத்துவர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார். தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துகொண்ட பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட மருத்துவர்களின் வறுமை நிலையை களைய உதவும் வகையில் மாதம் ரூ.500 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இது, பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட பதிவுபெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது நிலவிவரும் பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில், தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியமான ரூ.1,000 தங்களின் குறைந்தபட்ச வாழ்வாதார தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.1,000லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க பதிவுபெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன் அடிப்படையில், 2022-23ம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி பரம்பரை மருத்துவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1000 ஓய்வூதியம், இந்த ஆண்டு முதல் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தமிழ்நாடு இந்திய மருத்துவ கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.3000க்கான ஆணைகளை பரம்பரை மருத்துவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார், இந்திய மருத்துவம்  மற்றும் ஓமியோபதி இயக்குனர் கணேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: