×

காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ராகுலை சம்மதிக்க வைக்கும் கடைசி முயற்சியும் தோல்வி: அசோக் கெலாட், சசி தரூர், கமல்நாத், மணீஷ் திவாரி போட்டி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதில் போட்டியிட ராகுலை சம்மதிக்க வைக்கும் கடைசி கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் அசோக் கெலாட், சசி தரூர், கமல்நாத், மணீஷ் திவாரி ஆகிய 4 பேர் போட்டியிட உள்ளனர். காங்கிரசுக்குள் கோஷ்டி பூசல், மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வி போன்ற காரணங்களால் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு எதிராக ஜி23 தலைவர்கள் போர்க்கொடி தூக்கி கடிதம் எழுதினர். இதனால் கட்சியை பலபடுத்தவும், கட்சி அமைப்புகளில் சீர்த்திருத்தம் செய்யும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அடுத்த மாதம் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பு முறைப்படி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். அக். 1ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற அக்.8ம் தேதி கடைசி நாள். அன்று மாலை 5 மணியளவில் தேர்தலில் இறுதி  வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். பலர் போட்டியிடும் பட்சத்தில் அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் அக்டோபர் 19ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட வேண்டும் என்று இதுவரை 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், தலைவர் பதவிக்கு போட்டியிட ராகுல் விரும்பவில்லை. இது குறித்து தனது முடிவை தலைமையிடம் தெரிவித்துவிட்டதாக அவர் கூறி உள்ளார். அதே நேரம், தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்கு உரியவரான ராஜஸ்தான் முதல்வர் அசோக்  கெலாட்டும், கட்சித் தலைமையை விமர்சித்த ஜி23 தலைவர்களில் ஒருவரான திருவனந்தபுரம் எம்பி சசிதரூரும் போட்டியிட உள்ளனர்.

இருப்பினும், ராகுல் காந்தியை தலைவர் பதவிக்கு போட்டியிட வைக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது.  சில தினங்களுக்கு முன் ராகுலுக்கு சோனியா திடீர் அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் பாதயாத்திரையை நிறுத்திவிட்டு டெல்லி செல்ல மறுத்துவிட்டார். இந்த சூழலில், நேற்று முன்தினம் சோனியா காந்தியை சந்தித்து பேசிய அசோக் கெலாட், ‘அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டாலும், ராஜஸ்தான் முதல்வராக நானே தொடர்வேன்,’ என்று நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. இதற்கு சோனியா சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அசோக் கெலாட்டுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி கொடுத்து விட்டு, ராஜஸ்தானில் முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டை முதல்வராக்கி ராஜஸ்தான் கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. சச்சின் பைலட் ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர். இதனால், சச்சின் பைலட்டை முதல்வராக்க அசோக் கெலாட் விரும்பவில்லை. பைலட் முதல்வரானால் தனது ராஜஸ்தான் அரசியல் வாழ்க்கை தடைப்பட்டு விடுமோ என்று பயப்படும் கெலாட், கடைசி கட்ட முயற்சியாக ராகுலையே தலைவர் பதவிக்கு போட்டியிட வைக்கும் முயற்சிக்காக நேற்று கேரளா சென்றார்.

அங்கு ராகுலை சந்தித்து அவர் பேசி உள்ளார். அப்போது, ராகுல், போட்டியிடவில்லை என்ற தனது முடிவை திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதனால், அசோக் கெலாட்டின் கடைசி கட்ட முயற்சியும் தோல்வியடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தலைவர் பதவிக்கு மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தும், மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய  அமைச்சருமான மணீஷ் திவாரியும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக  கூறப்படுகிறது. இதனால், அசோக் கெலாட், சசி தரூர், கமல்நாத், மணீஷ் திவாரி ஆகிய 4 பேர் இடையே போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

தேர்தல் விவரம்
மனு தாக்கல் தொடக்கம்    செப். 24
மனு தாக்கல் கடைசி நாள்    செப். 30
மனுக்கள் பரிசீலனை    அக். 1
மனு வாபஸ் கடைசி நாள்    அக். 8
வாக்குப்பதிவு நாள்    அக். 17
வாக்கு எண்ணிக்கை    அக். 19

Tags : Rahul ,Congress ,Ashok Khelat ,Shashi Tharoor ,Kamal Nath ,Manish Tiwari , Last-ditch efforts to convince Rahul to agree to Congress presidential election official announcement fail: Ashok Khelat, Shashi Tharoor, Kamal Nath, Manish Tiwari contest
× RELATED மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு