×

கூடுதல் கட்டணம் வசூலை தடுக்க டாஸ்மாக் கடைகளில் யூபிஐ வசதி ஏற்படுத்தப்படுமா?... மதுபிரியர்கள் கோரிக்கை

நாகர்கோவில்: டாஸ்மாக் கடைகளில்  கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்த மது பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் அரசே நேரடியாக மது விற்பனை செய்து வருகிறது. தொடக்க காலத்தில் ஒரு சில மது பாட்டில்களின் விலை போக மீதி ரூ. 2 அல்லது ரூ.3 சில்லறையாக வழங்க வேண்டும் என்பதால், சில்லறை இன்றி ரவுண்டாக ரூ.5 அல்லது ரூ.10 என கணக்கிட்டு மீதி பணம் தந்தனர். பல கடைகளில் சில்லறை இருந்தாலும், விலையை ரவுண்டாக வாங்குவதாக வந்த புகார்களை அடுத்து, அரசே மது பாட்டில்களின் விலையை உயர்த்தி ரவுண்டாக மாற்றியது.

இதன் பின்னர் மதுபாட்டில்களின் விலையை குவாட்டருக்கு ரூ.5ம், ஆப் பாட்டில் என்றால் ரூ.10ம், முழு பாட்டிலுக்கு ரூ.20ம் என கட்டாய வசூல் செய்ய தொடங்கி விட்டனர். இதுபோல், பீர் பாட்டில் கூலிங்காக வழங்க மின்கட்ணத்திற்காக ரூ.5 வாங்கியவர்கள் இதனையும், ரூ.10 ஆக உயர்த்தி விட்டனர். மது பாட்டில்கள் விலை உயரும் போது, அதிலிருந்து எக்ஸ்ட்ரா பணம் வாங்கி வருகின்றனர். இதனை தடுக்க ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்த கடையிலும் ரசீது என்பது வழங்கப்படுவதில்லை. சில கடைகளில் கூடுதல் கட்டணம் ஏன் தர வேண்டும் என  வாக்குவாதம் செய்தால், மது பாட்டில் கிடையாது எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் செய் என ஒருமையில் மிரட்டல் விடுக்கின்றனர்.

தற்போது, மண்டல மேலாளர் வரை கடைகளின் விற்பனையை பொறுத்து, மாதம் தோறும் கப்பம் செலுத்துவதால், டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட யாருக்கு புகார் தெரிவித்தாலும், எந்த வித நடவடிக்கையும் கிடையாது. இந்த நிலையில், ஏடிஎம் கார்டுகள் பயன்படுத்தி மது விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி கார்டுகளை ஸ்வைப் செய்து சிலர் மது வாங்கி வந்தனர். இந்த நிலையில் கார்டு ஸ்வைப் இயந்திரங்களை டாஸ்மாக் நிர்வாகம் திரும்ப பெற்றுக் கொண்டது. இதனால் பணம் ரொக்கமாக கொடுத்தே மது வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் கூடுதல் கட்டண வசூலை தடுக்க போன் பே, பேடிஎம்  மற்றும் கூகுள்பே போன்ற க்யூஆர் ஸ்கேன் செய்து யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தினால், கூடுதல் பணம் வாங்கினாலும், அதுபற்றி ஆதாரத்துடன் புகார் செய்ய முடியும்.

மேலும், நேரடியாக டாஸ்மாக் கணக்கில் பணம் செலுத்துவதால், முறைகேடு குறைய வாய்ப்பு கிடைக்கும். டாஸ்மாக் கடைகளில் பணம் கொள்ளை போகும் வாய்ப்புகளும் குறையும் என மதுபிரியர்கள்கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 எலைட்டில் கூடுதல் வசூல்
டாஸ்மாக் வணிக வளாகங்களில் சாதா மது முதல் உயர்தர மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் வகையில் எலைட் மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. குமரியில் நாகர்கோவிலில் எலைட் மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு குவாட்டருக்கு ரூ.10ம், புல் பாட்டிலுக்கு ரூ.40ம் என இதர டாஸ்மாக் கடைகளை விட இருமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலும் வசதியானவர்கள் மற்றும் வெளியே தெரியாமல் மது அருந்துபவர்களே இங்கு வருவதால், கேட்ட பணத்தை தருகின்றனர். அப்படியே சிலர்  கணக்கு கேட்டாலும், இங்கும் மதுபானம் வழங்க மறுக்கின்றனர்.

மாமூலும் அதிகம்
தற்போது மதுபாட்டிலகள் அதிகம் விற்பனையாகும் கடை என்றால், மாதம் ஒரு லட்சத்திற்கும் மேல் வருவாய் கிடைக்கும் என்பதால், இதுபோன்ற கடைகளில் பணியாற்ற மேல் அதிகாரிகளுக்கு மாதம் தோறும் அதிக பணம் மாமூலாக வசூலிக்கப்படுகிறது. பணம் தர மறுத்தால், விற்பனை குறைவான கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். கடந்த சில மாதங்கள் முன்பு தினசரி விற்பனையில் 3 சதவீதம் இருந்த மாமூலம் தற்போது 5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக நேர்மையான ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.


3நிறுவன கவனிப்பு தனி மது விற்பனை செய்யும் நிறுவனங்கள் மருந்து விற்பனை பிரதிநிதிகள் போலவே மாவட்ட வாரியாக விற்பனை பிரதிநிதிகள் நியமித்துள்ளனர். இவர்கள் தங்கள் நிறுவன சரக்குகளை விற்பனை செய்யவதற்காக அதிகாரிகள் முதல் விற்பனையாளர்கள் வரை பரிசு பொருட்கள் மற்றும் ஊக்கத் தொகை தந்து வருகின்றனர். இதனால்தான் சில நேரங்களில், தலைவா இந்த சரக்கு நல்லாயிருக்கும் என விற்பனையாக மட்டமான சரக்குகள் மதுபிரியர்கள் தலையில் கட்டப்படுகிறது.

Tags : UPI ,Tasmac , Surcharge collection, Tasmac shop, UPI facility, Alcoholics demand
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்