தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சார்பில் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்திய சுதந்திர தினத்தின் 75-ம் ஆண்டு நிறைவு தினம், அம்பேத்கர் பிறந்த நூற்றாண்டு, மற்றும் விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் அனுமதி கோரிய மனுக்கள் முடிவெடுக்கபடமால் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றிற்கு அனுமதி வழங்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாகவும், புதுச்சேரியில் அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற தயாராக இருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எந்த பாதையில் இவர்கள் அனுவகுப்பு நடத்த உள்ளனர் என்ற தகவல்களை அவர்கள் அளிக்கவில்லை என்றும், ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்ப கூடாது, காயங்கள் ஏற்படும் வகையில் எந்த பொருட்களுக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் சட்டம் ஒழுங்கு மத நல்லிணக்கம் ஆகியவை காக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தபட்டது. மேலும் ஓரிரு இடங்களில் இல்லாமல், தமிழகம் முழுதும் அனுமதி கேட்பதால் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன் அக்.2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நடத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். ஊர்வலத்தில் கலந்துகொள்பவர்களுக்கு விரைவில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். காவல்துறையினர் செப்.28-ம் தேதிக்குள்  ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கு வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: