×

உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் காவலர்களின் குறைகளை தீர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்றார்: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி

சென்னை: காவலர்களின் குறைகளை களைந்திடும் வகையில், உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ், போலீசாரிடம் இன்று முதல்வர் மு,க.ஸ்டாலின் மனுக்களை பெற்று கொண்டு, அதை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவலர்களின் குறைகளை களைந்திடும் வகையில் உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் காவலர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உள்துறை கூடுதல் செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல் துறை கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் முக்கிய பணிகளை  தமிழக காவல்துறை செய்து வருகிறது. மேலும் புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவல் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்களுக்காக இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் காவல் துறையினரின் நலன் காத்திட, காவலர்கள் தங்கள் உடல் நலனை காத்திட, குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிட, இரண்டாம் நிலை காவலர் முதல் தலைமை காவலர்கள் வரையிலான அதிகாரிகளுக்கு வாரம் ஒரு நாள் ஓய்வு, காப்பீட்டு தொகை ரூ.60 லட்சமாக உயர்வு, ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களுக்கு ரூ.300 சிறப்பு படி, 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் விடுமுறை, காவலர்களுக்கான விடுப்பு செயலி, காவலர்களுக்கான இடர்படி ரூ.1000 உயர்வு போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் , காவலர்களின் குறைகளை கேட்டு அவற்றை களைந்திட உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம் சென்று போலீசாரிடம் நேரடியாக மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணி அளவில் டிஜிபி அலுவலகம் வருகை  தந்தார். அவரை உள்துறை, கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர்  வரவேற்றனர். அப்போது போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.  இதையடுத்து, சுற்றுச்சுழல் நலனை முன்னிறுத்தும் விதமாக டிஜிபி அலுவலக  வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழம்  மரக்கன்றை நட்டு  வைத்தார். இதையடுத்து, உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ், டிஜிபி  அலுவலகத்தில் காவலர்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார். அவர்களின்  குறைகளை கேட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

தலைவர்கள் நட்டு வைத்த மரக்கன்றுகள்:
டிஜிபி அலுவலக வளாகத்தில் கடந்த காலங்களில் முதல்வர்களாக பதவி வகித்த தலைவர்கள் மரக் கன்றுகளை நட்டு வைத்தனர். தற்போது அந்த மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. அந்தவகையில் முதல்வராக இருந்த எம்ஜிஆர் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். அதை தொடர்ந்து முதல்வராக இருந்த ஜெயலலிதா 2 முறை மரக் கன்றுகளை நட்டார். அதேபோல் முதல்வராக இருந்த கலைஞர் மகிழம் மரம் ஒன்றை நட்டு வைத்தார். தற்போது அது பெரிய மரமாக வளர்ந்து உள்ளது. தற்போது முதல்வராக பெறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், கலைஞரை போலவே மகிழம் மரக் கன்று ஒன்றை நட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

காவலர்கள் பலனடைவார்கள்
டிஜிபி சைலேந்திர பாபு தகவல்:  உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் போலீசாரிடம் மனுக்கள் வாங்கியதன் அடையாளமாக இன்று 10 பேரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களிடம் குறைகளை கேட்டார். மேலும் டிஜிபி அலுவலகக் கட்டிடம் குறித்து எங்களிடம் விசாரித்தார். இந்த கட்டிடத்தை 1993ல் இடித்துவிட்டு போலீஸ் நகரம் உருவாக்கப்படும் என அப்போது இருந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், பழமையான  கட்டிடம் என்பதால், அதை இடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து 1998ல் கலைஞர் முதல்வராக இருந்த போது, இந்த கட்டிடத்தை புதுப்பித்து கொடுத்தார். இப்போது வரை கம்பீரமாக இருக்கிறது என்பதை முதல்வரிடம் சொன்னோம். மேலும், மாவட்ட  வாரியாக போலீசாரிடம் இருந்து எத்தனை மனுக்கள் வந்துள்ளது. அதில எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என முதல்வர் கேட்டார். அதற்கு டிஜிபி அளவில் எங்களால் தீர்வு காணக்கூடிய மனுக்களுக்கு தீர்வு ஏற்படுத்தி உள்ளோம். சில மனுக்களை தமிழக காவல் துறையால் தீர்வு காண முடியாது என்பதால், அதை தமிழக அரசு தான் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடுத்து கூறினோம்.

குறிப்பாக இடமாற்றம், தண்டனைகள், ஊதிய முரன்பாடுகள் இதுபோன்ற பிரச்சனைகளுக்குதான் தீர்வு காண முடியவில்லை.  நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை குறைந்து அளவிலான காவலர்களே இருப்பார்கள், அதனால் இடமாற்றம் செய்ய முடியாது. இதுபோன்ற பல பிரச்சனைகளை எடுத்து கூறினோம். அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக முதல்வர் உறுதி அளித்தார். இதன் மூலம் எண்ணூர் போலீசார் வரை பலனடைவார்கள். இவ்வாறு கூறினார்.


Tags : K. Stalin , Chief Minister's scheme in your department, CM M.K. Stalin's petition to redress the grievances of subordinate constables, appropriate action,
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...