×

ஆஸி.க்கு எதிராக நாக்பூரில் நாளை நடக்கும் 2வது டி.20 போட்டியில் பும்ரா களம் இறங்குகிறார்?

நாக்பூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் ஆடுகிறது. இதில் மொகாலியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது போட்டி நாக்பூரில் நாளை நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று நாக்பூர் வந்தடைந்தனர். இன்று தீவிர பயிற்சியை மேற்கொண்டனர்.

முதல் போட்டியில் இந்தியா 208 ரன் குவித்தும் மோசமான பவுலிங்கால் தோல்வியடைந்தது. புவனேஸ்வர்குமார் 4 ஓவரில் 52, உமேஷ் யாதவ் 2 ஓவரில் 27, சாஹல் 3.2 ஓவரில் 42, ஹர்சல்பட்டேல் 4 ஓவரில் 49, பாண்டியா 2 ஓவரில் 22 ரன்னை வாரி வழங்கினர். இதனால் உலக கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் பந்துவீச்சை பலப்படுத்தவேண்டிய நெருக்கடியில் இந்தியா உள்ளது. முதுகில் காயத்தால் ஆசிய கோப்பை தொடரில் விளையாடாத பும்ரா 2 மாதங்களுக்கு பின் அணிக்கு திரும்பி உள்ளார்.

இருப்பினும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஆஸி.க்கு எதிரான முதல் போட்டியில் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாளைய போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. ஆஸி.வென்று தொடரை கைப்பற்றினால் இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்துவிடும். எனவே நாளைய போட்டி முக்கியமானது என்பதால் பும்ரா களம் இறங்குவது உறுதியாகி உள்ளது. வள்ளல் நாயகன் உமேஷ் யாதவ்விற்கு பதிலாக அவர் களம் இறங்குகிறார். இதேபோல் சாஹலுக்கு பதிலாக அஸ்வின், தினேஷ் கார்த்திக்கிற்கு பதில் ரிஷப் பன்ட் ஆடும் லெவனில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு குழுவினர் கவலை
உலக கோப்பைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் இந்தியாவின் பந்துவீச்சு குறித்து தேர்வு குழுவினர் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து தேர்வு குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், நிச்சயமாக, பந்துவீச்சாளர்கள் 208 ரன் இலக்கை பாதுகாக்க முடியாதபோது அது கவலைக்குரியது. அதே நேரம் மொகாலி பிட்ச் பேட்டிங்கின் சொர்க்கமாக இருந்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, ஒரு போட்டியின் அடிப்படையில் அவற்றை நிராகரிப்பது சிறந்ததாக இருக்காது. பவுலர்களுக்கு தேவையான உதவி குறித்து நாங்கள் குழு நிர்வாகத்துடன் பேசுவோம், என்றார்.

பும்ரா ஏன் முக்கியம்?
பும்ரா இல்லாமல், கடந்த ஐந்து போட்டிகளில் இந்தியா மூன்றில் தோல்வியடைந்துள்ளது. முதல் டி.20 போட்டியில் பும்ராவுக்கு பதிலாக 3 ஆண்டுக்கு பின் களம் இறங்கிய உமேஷ் முதல் 4 பந்துகளிலும் தொடர்ச்சியாக பவுண்டரி வழங்கினார். காயத்தில் இருந்து திரும்பிய ஹர்ஷல் படேலும் 49 ரன் வழங்கினார். அனுபவ வீரர் புவனேஷ்வர் குமாரும் அதிக ஏமாற்றம் அளித்து வருகிறார். ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேற்று முன்தினம் ஆஸி.க்கு எதிரான என 3 போட்டியிலும் 19வது ஓவரை வீசிய அவர் 45 ரன்(18 பந்தில்) கொடுத்து தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் பும்ரா அணிக்கு முக்கியத்துவம் பெறுகிறார். புவனேஷ்வருக்குப் பதிலாக தீபக் சாஹருக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம்.

Tags : Bumrah ,Nagpur ,Aussies , 2nd T20 Match, Bumrah, Australian Cricket Team
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...