தூத்தூர் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் செல்வதற்கான முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூக்கால் கிராம மக்கள் கோரிக்கை

திண்டுக்கல்: கொடைக்கானல் கூக்கால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முறையான வழிகாட்டு விதிமுறைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என தூத்தூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் பசுஞ்சோலை காடுகளுக்கு மத்தியில் எழில் கொஞ்சும் கிராமமான கூக்கால் கிராமத்தில் தூத்தூர் அருவி அமைத்துள்ளது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கூக்கால் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் வழிகாட்டியாக பணியாற்றினர். இதற்காக குழு அமைத்து அரசின் அனுமதியுடன் பதிவு செய்து சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலித்து அருவிக்கு அழைத்து செல்லும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உணவுகளும் கூக்கால் கிராம மக்களால் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த அருவிக்கு செல்ல கடந்த ஒரு வாரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அருவி இருப்பது வனத்துறையிடமா அல்லது வருவாய்துறையிடமா என்ற குழப்பமே சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதற்கு காரணம்.

இந்த தடையால் சுற்றுலா பயணிகளை நம்பியிருந்த கூக்கால் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடங்கியுள்ளது. விவசாய தொழில் பொய்த்துப்போன நிலையில் தங்களது வாழ்வாதாரத்தை காக்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்பதே கூக்கால் கிராம மக்களின் பிரதான கோரிக்கையாகும்.

அருவிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையால் கூக்கால் கிராமத்தினர் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தூத்தூர் அருவியின் பிரமாண்டத்தையும் அதன் பின் நின்று உடல்வருடி செல்லும் மூலிகை சாரலையும் அனுபவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா பயணிகள் தவிக்கின்றனர்.

Related Stories: