ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதி உதவி தமிழகம், கேரளாவில் 56 இடங்களில் ரெய்டு: 30 பேர் கைது; என்ஐஏ அதிரடி

சென்னை: தமிழகம், கேரளா உள்ளிட்ட 56 இடங்கள் உள்பட 13 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது ஐஎஸ்ஐஎஸ் இயக்கமாகும். இந்த இயக்கம் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் இருந்து ஏராளமான இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்து வருவதாகவும், இந்தியாவில் இருந்து இந்த அமைப்புக்கு நிதி உதவி அளிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள என்ஐஏ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், இந்தியாவில் இருந்து பணம் அனுப்பியிருந்ததை கண்டுபிடித்தனர். குறிப்பாக கேரளா, தமிழகத்தில் இருந்துதான் அதிக அளவில் பணம் அனுப்பப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, என்ஐஏ அதிகாரிகள் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் என்ஐஏ எஸ்பி ஜித் தலைமையிலான போலீசார் 16 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது. தமிழக்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 3 பேரை டெல்லி போலீசாரிடம் தமிழக என்ஐஏ அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

கோவை

கோவை ஆத்துப்பாலம் அருகே உள்ள கரும்பு கடை பகுதியில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவர் வீடு உள்ளது. இவரது வீட்டுக்கு இன்று காலை 5.30 மணிக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் 15 பேர் சென்றனர். சிஆர்பிஎப் (துணை ராணுவ படை) பிரிவை சார்ந்த போலீசார் வீட்டை சுற்றியும் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இஸ்மாயிலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக இச்சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதை அடுத்து இஸ்மாயிலை கைது செய்த என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக கேரளா அழைத்து சென்றனர்.

மதுரை

மதுரை நெல்பேட்டையில் உள்ள பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் யூசுப் வீட்டில் இன்று அதிகாலை என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் கோரிப்பாளையம், வில்லாபுரம் மற்றும் யாகப்பா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பேகம்பூர் முகமதியாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் 2ம் மாடியில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா கட்சியின் அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் 10 பேர் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் பரக்கத்துல்லாவின் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து, விசாரணைக்காக சென்னை அழைத்து சென்றனர்.

தேனி முத்துதேவன்பட்டியில் உள்ள அறிவகம் மதர்சா அலுவலகத்திலும் சோதனை நடந்தது. கம்பத்தில் தேசிய புலனாய்வுத்துறை எஸ்பி சுனில் தலைமையான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மதுரை மண்டல செயலாளர் யாசர் அராபாத்தை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

நெல்லை

நெல்லை மாவட்டம் ஏர்வாடி மீனாட்சிபுரத்தில் பெண்கள் மதரஸா(அறிவகம்) உள்ளது. இங்கு இஸ்லாமிய பெண்கள் மற்றும் மாற்று மதத்தில் இருந்து வந்த பெண்களுக்கு மார்க்க கல்வி அளிக்கப்படுகிறது. இங்கு இன்று காலை 6 மணி முதல் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவில் உள்ள பண்பொழி கிராமத்தில் வசித்து வருபவர் முகமது அலி ஜின்னா. இவர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்நிலையில் இவரது வீட்டில் இன்று அதிகாலை 3 மணி முதல் தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட போலீசார்(என்ஐஏ) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஜாகீர்உசேன் நகரை சேர்ந்தவர் பயாஸ் அஹமது. எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் தேசிய புலனாய்வு முகமையை (என்ஐஏ) சேர்ந்த அதிகாரிகள் 11 பேர் அதிரடியாக பயாஸ் அஹமது வீட்டின் உள்ளே புகுந்து உள்பக்கமாக பூட்டு போட்டுவிட்டு, சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் பயாஸ் அஹமது மற்றும் அவரது சகோதரர் இம்தியாஸ் அஹமது (36) ஆகிய இருவரையும் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

காரைக்கால்

காரைக்கால் திருப்பட்டினத்தில் பாப்புலர் பிரண்ட்ஸ் அமைப்பு நிர்வாகி பக்ருதீன், காரைக்கால் நகர பகுதியை சேர்ந்த பிலால் மற்றும் குத்தூஸ் ஆகிய 3 பேரின் வீடுகளில் 15 பேர் கொண்ட என்ஐஏ குழுவினர் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 3 பேரின் வீடுகளிலும் பென் டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

அதேபோல கேரளாவில் என்ஐஏ எஸ்பி  தர்மராஜ் தலைமையில் 40 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  கேரளாவில் மட்டும் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 பேர் டெல்லி  போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 12 பேரை கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள  என்ஐஏ போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்  மணக்காடு பகுதியில் உள்ள மாவட்ட கமிட்டி அலுவலகம், மாவட்ட தலைவர் அஷ்ரப்  மவுலவியின் திருவனந்தபுரம் பூந்துறையில் உள்ள வீடு, எர்ணாகுளத்தில் மாநில  துணைத்தலைவர் அப்துல் ரகுமான், கோட்டயம் மாவட்ட தலைவர் சைனுதீன், பாலக்காடு  மாவட்டத்தில் உள்ள மாநில கமிட்டி உறுப்பினர் ரவுப்பின் கரிம்புள்ளி  பகுதியில் உள்ள வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரத்தில்  பாப்புலர் பிரண்ட் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்தில்  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. என்ஐஏ அதிகாரிகளின் வாகனத்தை தடுக்க முயன்றதால்  பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்பைச் சேர்ந்த  மாநில தலைவர் உள்பட 13 முக்கிய தலைவர்களை என்ஐஏ அதிகாரிகள் பிடித்து  விசாரித்து வருகின்றனர். இவர்களை உடனடியாக விடுவிக்கா விட்டால் நாளை  கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாப்புலர் பிரண்ட்  அமைப்பு அறிவித்துள்ளது.  சோதனையை கண்டித்து திருவனந்தபுரம், கோழிக்கோடு,  மலப்புரம் உள்பட பல்வேறு இடங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் சாலை  மறியல் உள்பட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். என்ஐஏ போலீசாரின் சோதனையைக் கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் அவர்களது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Related Stories: