இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டிக்கான டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு; 1 பெண் உயிரிழப்பு: 20 பேர் காயம்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டிக்கான டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ரசிகை ஒருவர் உயிரிழந்தார். கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதில் 5 பெண்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஜிம்கானா மைதானத்தில் 25-ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள போட்டிக்கு இன்று டிக்கெட் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நிலையில், நேற்று இரவு முதலே ரசிகர்கள் போட்டி நடைபெற உள்ள ஜிம்கானா மைதானத்தின் முன்பு குவிய தொடங்கினர்.

இன்று காலை 10.30 மணிக்கு டிக்கெட் வழங்க தொடங்கிய நிலையில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் முந்தியடித்து சென்றனர். அப்பொழுது போலீசாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இருதரப்பினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 5 பெண்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.

மேலும் ஒரு பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் மயங்கி விழுந்த நிலையில் அவருக்கு போலீசார் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து டிக்கெட் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மீண்டும் டிக்கெட் விற்பனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Related Stories: