சென்னை விமான நிலையத்தில் துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்: 2 பேர் கைது

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து நேற்றிரவு துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய 2 பயணிகளிடம் இருந்து ரூ.37.39 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஏர்இந்தியா விமானம் நேற்றிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தயார்நிலையில் நின்றிருந்தது. அதில் செல்லவேண்டிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்து, அவர்களை விமானத்துக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையை சேர்ந்த சையத் இப்ராஹிம் (30), அக்பர் (26) என்ற 2 பயணிகளின்மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இருவரையும் தனியறைக்கு கொண்டு சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், அவர்கள் இருவரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ஏராளமான வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.

அந்த நோட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் எண்ணி பார்த்தபோது, ரூ.37.39 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் மற்றும் யூரோ கரன்சிகள் எனத் தெரியவந்தது. அந்த வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். அவர்களின் துபாய் பயணத்தை ரத்து செய்து, இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: