×

தமிழகத்தில் பூக்கள் உற்பத்தியில் 5வது இடத்தில் வேலூர் மாவட்டம்; அதிகளவில் பூக்கள் சாகுபடி இருந்தும் கேள்விக்குறியான சென்ட் ஆலை: விவசாயிகளை விட லாபம் சம்பாதிக்கும் வியாபாரிகள்

வேலூர்: ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’ என்று திருவள்ளுவர் கூறி உள்ளார். உலகில் அனைத்து மக்களும் விவசாயிகளின் பின்னே செல்ல வேண்டும் என்று விவசாயத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்துள்ளார். அந்த வகையில் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் விவசாயிகள்தான். ஆனால் பல்வேறு காரணங்களால் நாட்டில் ஆண்டுக்காண்டு வேளாண் உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. மத்திய, மாநில அரசுகள் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மாறி வரும் காலநிலை மாற்றம், தொழில்மயம், விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்காத போன்ற பல்வேறு சூழ்நிலைகளால் விவசாயம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், ஆம்பூர், குடியாத்தம் உட்பட பல்வேறு இடங்களில் நெல், வாழை, கரும்பு, தென்னை, சப்போட்டா, மா, மக்காச்சோளம் மற்றும் காய்கறி வகைகள் பயிர் செய்யப்படுகிறது. மேலும் மல்லிகை, முல்லை, சாமந்தி என மலர் வகைகளும் சாகுபடி செய்யப்படுகிறது. வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பாலாறு இன்றைக்கு மணல் கொள்ளை உட்பட பல்வேறு காரணங்களால் பாழ்பட்டு காட்சியளிக்கிறது. கனமழை பெய்தால் கூட பாலாற்றில் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுவிட்டது. இத்தகைய நெருக்கடியான சூழலில் வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைந்தளவு நீராதாரத்தை கொண்டு சொட்டுநீர் பாசனத்தின் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். குறைந்த அளவே தண்ணீர் ேதவை கொண்ட மல்லிகை, சாதிமல்லி, முல்லை, சாமந்தி, கனகாம்பரம், ரோஜா, சம்பங்கி மற்றும் சிறுதானிய வகை பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

முக்கிய பயிர்களான நெல், கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் அதிக தேவை என்பதால் நெல், கரும்பு பயிர்களை தவிர்த்து பெரும்பாலான விவசாயிகள் சிறுதானியம் மற்றும் பூக்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வந்த பூக்கள் தற்போது 1000 ஹெக்டேராக குறைந்துள்ளது. இருப்பினும் டன் கணக்கில் அறுவடை செய்யப்படும் பூக்களான ஜாதிமல்லி, மல்லிகை, முல்லை, ரோஜா, சாமந்தி, சம்பங்கி, கனகாம்பரம் உள்ளிட்ட பூ வகைகள் வேலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோல் சில விவசாயிகள் சென்ட் ஆலைகளுக்காக முல்லை, மல்லிகை பூக்களை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இவ்வாறு வெளிமாநிலங்களுக்கு பூக்களை ஏற்றுமதி செய்யும்போது விவசாயிகளுக்கு ஏற்றுமதி செய்யும் செலவினம், வேலையாட்கள் கூலி என அவர்களுக்கு லாபம் கிடைக்காமல் நஷ்டத்தில் விற்பனை செய்துவருகின்றனர்.வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக பேரம் பேசி குறைந்த விலைக்கு பூக்களை கொள்முதல் செய்கின்றனர். இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பூக்களை வியாபாரிகள் மார்க்கெட் மற்றும் சென்ட் ஆலைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். தமிழகத்தில் பூக்கள் உற்பத்தியில் வேலூர் மாவட்டம் 5வது இடத்தில் உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மல்லிகை 450 ஹெக்டேர், முல்லை 800 ஹெக்டேர், ரோஜா 70 ஹெக்டேர் என்று மொத்தம் 1,320 ஹெக்டேரில் 12 ஆயிரத்து 947.57 டன் பூக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் வேலூர் மாவட்டத்தில் பூக்கள் சாகுபடி அதிகம் நடைபெறும் மாதனூர், அணைக்கட்டு, ஆலங்காயம் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் நலன் கருதி ஒடுகத்தூர் பகுதியில் சென்ட் ஆலை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 25 ஆண்டுகளாக எழுந்து வருகிறது.ஒவ்வொரு தேர்தலிலும் இதுதொடர்பான வாக்குறுதியை ஒவ்வொரு கட்சியும் அளிப்பதும், தேர்தல் முடிந்ததும் சென்ட் ஆலை குறித்த பேச்சை மறப்பதும் தொடர்ந்து வருகிறது.

இப்போதைய சூழலில் வேப்பங்குப்பம் பகுதியில் தனியார் சென்ட் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அரசின் சார்பிலோ கூட்டுறவுத்துறை மூலமோ அல்லது அரசு தனியார் பங்களிப்பு மூலமோ சென்ட் ஆலையை தொடங்கினால் விவசாயிகள் பலன் பெறுவதுடன், இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இனியாவது மத்திய, மாநில அரசுகள் டன் கணக்கில் பூக்களை உற்பத்தி செய்யும் வேலூர் மாவட்டத்தில் சென்ட் ஆலை அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Vellore district ,Tamil Nadu , Vellore district ranks 5th in flower production in Tamil Nadu; Cent plant in question despite increased flower cultivation: Traders profiting more than farmers
× RELATED தேர்தல் அமைதியாக நடக்க வேண்டி...