வனத்தை விட்டு வெளியேறும் விலங்குகளை கண்டு சுதாரிக்க சத்தி புலிகள் காப்பக பகுதியில் 12 கிமீ தூரம் புதர்கள் அகற்றம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் வரவேற்பு

சத்தியமங்கலம்: வனத்தை விட்டு வெளியேறும் விலங்குகளை கண்டு வாகன ஓட்டிகள் சுதாரிக்கும் வகையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் சாலை இருபுறமும் 12 கிமீ தூரம் புதர்களை அகற்றி தூய்மை செய்யும் பணியை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். இதற்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவதால் வாகனங்களில் அடிபட்டு அடிக்கடி உயிரிழக்கின்றன.

இந்நிலையில் இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதி சாலையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக கர்நாடக மாநிலம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதனால் இரவு 9 மணிக்கு மேல் வரும் சரக்கு லாரிகள் பண்ணாரி அம்மன் சோதனைச்சாவடி அருகே பண்ணாரி அம்மன் கோயில் பகுதியில் சாலை ஓரத்தில் லாரிகளை வரிசையாக நிறுத்தி ஓய்வு எடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்தில் நடமாடிய போது, கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சீனிவாஸ் என்பவரை தாக்கி மிதித்து கொன்றது. இரவு நேரத்தில் லாரிகள் நிறுத்தப்படுவதால் ஓட்டுநர்கள் யானை உள்ளிட்ட வனவிலங்குகளிடம் சிக்கி உயிரிழப்பதை தவிர்க்க இரவு 9 மணிக்கு மேல் பண்ணாரி சோதனைச்சாவடி மற்றும் கோயில் பகுதியில் லாரிகளை நிறுத்தக்கூடாது என சத்தியமங்கலம் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி செல்லும் லாரிகள் இரவு 9 மணிக்கு மேல் புது வடவள்ளி மற்றும் புதுக்குய்யனூர் பகுதியில் நிறுத்துமாறும், பண்ணாரி அம்மன் கோயில் மற்றும் சோதனைச்சாவடி பகுதிக்கு இரவு 9 மணிக்கு மேல் சரக்கு வாகனங்களை கொண்டு வந்து நிறுத்தக்கூடாது எனவும் வனத்துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து வனத்துறையினர் அறிவுரையை ஏற்று, தற்போது இரவு நேரத்தில் செல்லும் லாரி ஓட்டுநர்கள் புது வடவள்ளி பகுதியில் தங்களது சரக்கு லாரிகளை நீண்ட வரிசையில் நிறுத்தி வருகின்றனர். சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளி முதல் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி வரை இருபுறமும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இதனால் வனவிலங்குகள் சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். வனவிலங்குகள் சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதை தவிர்க்க வனத்துறை சார்பில் சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனங்களில் செல்வோர் 30 கிமீ வேகத்தில் வாகனங்களை இயக்குமாறு வனத்துறை சார்பில் ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ச்சியாக வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் உயிரிழந்ததால் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் புதுவடவள்ளி பகுதி முதல் பண்ணாரி திம்பம் மலையடிவாரம் வரை 5 கிமீ தூரமும், ஆசனூர் முதல் காரச்சாவடி வன சோதனைச்சாவடி வரை 7 கிமீ தூரமும் என, மொத்தம் 12 கிமீ தூரத்திற்கு சாலை இருபுறமும் அடர்ந்த புதர்களை வனத்துறையினர் அகற்றியுள்ளனர். இதன்மூலம் வனத்தை விட்டு வெளியேறும் புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டத்தை அறிந்து, வாகன ஓட்டிகள் வாகனங்களை எச்சரிக்கையாக இயக்க முடியும். இதனால் மனித உயிரிழப்புகளை தவிர்க்க வாய்ப்பு ஏற்படும். இதையடுத்து வனத்துறை அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: