×

பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேவதானப்பட்டி: பெரியகுளம் அரசு தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகுளம் பகுதியில் தாமரைக்குளம், வடுகபட்டி, மேல்மங்கலம், அழகர்நாயக்கன்பட்டி,   நல்லகருப்பன்பட்டி,   சில்வார்பட்டி,   ஜெயமங்கலம்   உள்ளிட்ட   இடங்களில்    வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வந்தது. ஆனால் வெற்றிலை சாகுபடியில் வாடல்நோய் தாக்கி விவசாயிகளுக்கு பெரும்  இழப்பை கொடுத்தது. இதனால்  கடந்த 20 ஆண்டுகளில் வெற்றிலை சாகுபடி படிப்படியாக குறைந்து தற்போது குறைந்த அளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பெரியகுளம் ஒன்றியத்தில் கடந்த 25  ஆண்டுகளுக்கு முன்,  10கும் மேற்பட்ட கிராமங்களில் 5ஆயிரத்திற்கும்  மேற்பட்ட வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள்,   25ஆயிரம் வெற்றிலை கொடிக்கால்  தொழிலாளர்கள் என  வெற்றிலை கொடிக்காலை மட்டும் நம்பி இருந்தனர். இந்த   பகுதியில்   இருந்து வட தமிழகம், வட மாநிலங்கள் என நாள் ஒன்றுக்கு டன்  கணக்கில்   வெற்றிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. வெற்றிலை சாகுபடி   செழித்து  வந்துகொண்டிருந்த போது 1991ஆம் ஆண்டு வெற்றிலை பயிரில் புதிய வாடல் நோய்  தாக்க ஆரம்பித்தது. இதனால் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து  மகசூலுக்கு  வரும் போது வாடல் நோய் தாக்கி வெற்றிலை கொடி முற்றிலும் காய்ந்து போனது.  

வாடல் நோய் தாக்கி  பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கடன் நெருக்கடியை  வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் சந்தித்து வந்தனர். அதன் பின்னர் 1991 ஆம்  ஆண்டில் இருந்து தொடர்ந்து 10ஆண்டுகள் தொடர் நஷ்டத்தை வெற்றிலை கொடிக்கால்  விவசாயிகள் சந்தித்தனர். பின்னர் வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் மாற்று  சாகுபடிக்கு மாறினர். வெற்றிலை கொடியில் வாடல் நோய் தாக்க ஆரம்பிக்கும்  காலத்தில் பெரியகுளம் வட்டாரத்தில்  ஆயிரம் எக்டேர் பரப்பளவில் வெற்றிலை  சாகுபடி  இருந்தது.  வாடல் நோய் தாக்குதல் காரணமாக படிப்படியாக குறைந்து  தற்போது 200க்கும் குறைவான எக்டேர் பரப்பளவு  சாகுபடி உள்ளது. பெரியகுளம் வட்டாரத்தில் முக்கிய  பணப்பயிராக வெற்றிலை கொடிக்கால் சாகுபடி இருந்தது. இந்த பகுதியில் நாடு,  சிஊகமணி என இரண்டு ரகம் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.

அதிக பரப்பளவில்  சாகுபடி நடந்த வெற்றிலை கொடிக்கால் சாகுபடி தற்போது சொற்ப அளவில் நடைபெற்று  வருகிறது. மற்ற பயிர்கள் சாகுபடி என்பது ஒரு விவசாயி எவ்வளவு  ஏக்கர்  பரப்பு வேண்டுமானாலும் பயிரிடலாம். ஆனால் வெற்றிலை என்பது ஒரு ஏக்கரில்  குறைந்தது 10 பேர்  சாகுபடி செய்வார்கள்.  ஒரு ஏக்கர் சாகுபடிக்கு ரூ.7  லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சாகுபடி செலவினங்கள் ஏற்படும். ஆகையால், குறைந்த பரப்பளவில் அதிக விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்ய முடியும். வாடல் நோய் தாக்குதல் காரணமாக  வெற்றிலை கொடிக்கால் விவசாயம்  பாதிக்கப்பட்டு கடன்பட்டு ஏராளமான விவசாயிகள்  வாழ்வாதாரத்தை தேடி தொழில்  நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். எனவே, இந்த வெற்றிலை சாகுபடியில் வாடல் நோய்க்கான காரணங்களை கண்டுபிடித்து அதற்கு தீர்வு கண்டால் வெற்றிலை சாகுபடி விவசாயிகள் வாழ்க்கை பிரகாசிக்கும். இதற்காக பெரியகுளம் அரசு தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெற்றிலை சாகுபடிக்கு,  வெற்றிலை   ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஜெயமங்கலம் விவசாயி சக்திவேல் கூறுகையில், ‘‘மற்ற பணப்பயிர்களை ஒப்பிடுகையில், கரும்பு, ஒரு  வருடம் கழித்து  மகசூல் கொடுக்கிறது.  வாழை ஒரு வருடத்திற்கு பின் மகசூல் கொடுக்கிறது.  ஆனால் வெற்றிலை பயிர் நடவு செய்த 6 மாதம் கழித்து ஒவ்வொரு 40 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யப்படுகிறது.  இதனால் வெற்றிலை கொடிக்கால் விவசாயிகளுக்கு 40 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து வருமானம், 3 ஆண்டுகளுக்கு கிடைத்தது. வெற்றிலை கொடிக்கால் சாகுபடி மூன்று வருட பயிராகும்.  இதனால் சமூகத்தில் வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர்ந்து காணப்பட்டனர். ஆனால்  தற்போது நோய் தாக்குதல் காரணமாக வெற்றிலை பயிர் சாகுபடி  குறைந்துவிட்டது.  

ஆகையால் பெரியகுளம் அரசு தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைத்து, வெற்றிலை பயிரை தாக்கும் வாடல் நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்து உரிய  தடுப்பு முறைகளை கண்டுபிடித்து மீண்டும் வெற்றிலை கொடிக்கால் சாகுபடியினை அதிகரிக்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

கடந்த ஆட்சியில் செவி சாய்க்கவில்லை: சில்வார்பட்டி விவசாயிகள் நலச்சங்க பொருளாளர் முத்துக்காமாட்சி கூறுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில்  விவசாயிகளின் கோரிக்கைளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை. பெரியகுளத்தில் வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் வேண்டும் என பல முறை தோட்டக்கலைத்துறைக்கும், அரசுக்கும் கோரிக்கை வைத்தோம். ஆனால், எந்தவித பலனும் இல்லை. ஆனால், தற்போது இந்த ஆட்சி விவசாயிகளின் நடைமுறை சிக்கல்களை புரிந்து நேரடி கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

பெரியகுளம் பகுதி வெற்றிலை கொடிக்கால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பெரியகுளம் அரசு தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும். அதன் மூலம் வெற்றிலை பயிரில் ஏற்படும் வாடல் நோயை கட்டுப்படுத்த ஆராய்ச்சி செய்து வெற்றிலை கொடிக்கால் விவசாயிகளின் வாழ்க்கையில் விளக்கேற்ற  வேண்டும்’’ என்றார்.



Tags : Betel ,center ,Periyakulam Government Horticulture College , Betel nut research center to be set up at Periyakulam Government Horticulture College?: Expectations of farmers
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...