அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திருச்சி ஆக்டோபஸ் பாலம் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது: 2 மாதத்தில் நிறைவடையும்

திருச்சி: கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திருச்சி ஜங்ஷன் ஆக்டோபஸ் பாலம் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இனி வாகனங்கள் நெரிசலின்றி பயணிக்கலாம். திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலையம், ரயில்வே ஜங்ஷன், மன்னார்புரம், எ.புதூர் ஆகிய 5 வழித்தடங்களை இணைக்கும் வகையில் ரூ.115 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு வந்தது. இதில் மன்னார்புரம் வழித்தடத்தை தவிர அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டன. மன்னார்புரம் வழித்தடத்தில் ராணுவ நிலம் இருந்ததால் அதை கையகப்படுத்தும் பணிகளில் ஏற்பட்ட நிர்வாக பிரச்னைகள் காரணமாக பணிகள் முடிக்க தாமதமாகி வந்தது. இதையடுத்து எம்பி திருநாவுக்கரசர் பலமுறை இதுதொடர்பாக ராணுவ அமைச்சகத்துக்கும், ஒன்றிய அரசுக்கும் கோரிக்கை விடுத்து வந்தார்.

தொடர்ந்து 10 ஆண்டுகளாக கிடப்பிலிருந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற முனைப்போடு தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு எடுத்த சீரிய முயற்சிகளின் காரணமாக தமிழக அரசு சார்பில் ராணுவ அமைச்சகத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, ராணுவ இடத்தை கேட்டு பெற்று, அனுமதியும் பெற்றது. மன்னார்புரம் செல்லும் பாதையில் பாலம் பணிகள் முடிவுற்று, 134 மீட்டர் நீளமுள்ள அணுகுசாலை பகுதியில் ராணுவ நிலத்துக்கு பாதுகாப்புத்துறை உள் நுழைய அனுமதி வழங்கியதை அடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, கடந்த மே 4ம் தேதி செயலாக்கப்பட்டு, மே 5ம் தேதி ராணுவ நிலம் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து நிலுவையிலிருந்த மன்னார்புரம் வழித்தட பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி வைத்தார். மூன்று மாதத்துக்குள் பணிகள் நிறைவடையும் என அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் தொடர் மழை, ராணுவ நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் வடிகால் கட்டுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவும் பணிகள் துவங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. மேலும் பாலத்தின் பக்கவாட்டில் பதிப்பதற்காக 250 கான்கிரீட் பேனல்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது தான் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து தற்போது இணைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.

மன்னார்புரம் வழித்தடத்தில் அணுகுசாலை, சர்வீஸ் ரோடு, மழைநீர் வடிகால் அமைப்பு, ராணுவ நில சுற்றுச்சுவர் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் 2 மாதத்துக்குள் நிறைவடையும். அதன்பின் அரசு ஒப்புதல் பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலிருந்த பணிகள் 2 மாதத்தில் நிறைவடைய உள்ளதால், இனி மன்னார்புரத்தில் இருந்து வரும் வாகனங்கள் நெரிசலின்றி பயணிக்கலாம்.

Related Stories: