×

சேலம் மண்டலத்தில் பழமை மாறாமல் சீரமைக்கப்டும் திருக்கோயில்கள்: கும்பாபிஷேக விழாவிற்கும் அச்சாரம்

சேலம்:சேலம் மண்டலத்தில் தொன்மை வாய்ந்த திருக்கோயில்கள் பழமை மாறாமல் சீரமைக்கப்படுகிறது. இது பக்தர்களோடு தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியிலும் வரவற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய கோயில்கள் உள்ளன. இதில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் வரும் கோயில்கள் முதல் நிலை கோயிலாகவும், ரூ.5 லட்சம் வரை இரண்டாம் நிலை கோயில் என்றும், ரூ.1 லட்சம் வரை மூன்றாம் நிலை கோயில் என்று தரம் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில்களின் உண்டியல் மூலம் ஆண்டுக்கு பல கோடி வருவாய் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.

ஆகம விதிப்படி கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும். தமிழகத்தில் பல்லாயிரம் கோயில் 15 ஆண்டு முதல் 30 ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேக விழா நடைபெறாமல் உள்ளது. தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு கும்பாபிஷேகம் நடைபெறாத கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேக விழா நடத்தி வருகிறது. அந்த வகையில் சேலத்தில் சுகவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடக்கவுள்ளது. இதற்கானபணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான கோயில்கள் பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள், ஆகம வல்லுநர் குழுவினர், பொறியாளர்கள், தொல்லியல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகத்தில் 115 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், தர்மபுரி காரிமங்கலம் செல்லியம்மன் கோயில்,  திருப்பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டலம் சேலம், தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கோயில்கள் உள்ளன. இதில் சேலம் மாவட்டத்தில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், தர்மபுரி காரிமங்கலம் செல்லியம்மன் கோயிலில் தொன்மை மாற்றாமல் திருப்பணிகள் மேற்கொள்ள  திருப்பணிகள் மேற்கொள்ள அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது சம்பந்தமாக திட்ட அறிக்கை தயார் செய்து அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணியில் சேதமடைந்த மண்டபம், அர்த்தமண்டபத்தின் தரைத்தளம், ராஜகோபுரம் மற்றும் சன்னதி கோபுரங்களின் சீரமைப்பு பணிகள் தொன்மை மாறாமல் மேற்கொள்ளப்படும்.

இதேபோல் தர்மபுரி காரிமங்கலம் செல்லியம்மன் கோயிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் நிறைவடைந்தபின், கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடத்தப்படும். தான்தோன்றீஸ்வரர் கோயிலில் கடந்த 2002ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 21ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இது குறித்து தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘வேள்வியூர் என்று புராணத்தில் பிரசித்தி பெற்ற பேளூரில் அமைந்திருக்கும் தான்தோன்றீஸ்வரர் கோயில் ஆயிரமாண்டு பழமை வாய்ந்தது. சுயம்புவாக அவதரித்த தான்தோன்றீஸ்வரர், அறம் வளர்த்த அம்மையுடன் அமர்ந்து அருள்பாலிக்கிறார். வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோயிலின் தலவிருட்சமாக மா, பலா, இலுப்பை என்று மூன்று மரங்களும் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 3ம்தேதியில் இருந்து 10ம்தேதிவரை மூலவர் மீது சூரியஓளி படுவதும் வியப்பு. இப்படி புராணச்சிறப்பு கொண்ட இந்த கோயில், நுண்ணிய சிற்பக்கலையிலும் சிலிர்க்க வைக்கிறது. மூன்று சூலாயுதங்கள் போல் அம்மனும், சுவாமியும் வீற்றிருப்பது, யாழி வாய்க்குள் உருளும் உருண்டைக்கல் என்று அனைத்தும் கலை வடிவங்களின் உச்சம் தொட்டு நிற்கிறது. இப்படி பெருமைமிகு புரதானமாக திகழும் இந்த கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுவதால், அடுத்த தலைமுறைக்கு புதிய பொக்கிஷமாய் கிடைக்கும்,’’ என்றனர்.


Tags : Salem Mandal ,Kumbabishek ceremony , Temples in Salem Mandal to be rehabilitated: Kumbabhishek ceremony also called for
× RELATED மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா