×

வட அயர்லாந்து நாட்டு கடலில் 35 கிமீ தூரத்தை நீந்தி கடந்து தேனி மாணவர் சாதனை

தேனி : தேனியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் சினேகன் வட அயர்லாந்து நாட்டில் உள்ள வடக்கு கால்வாய் கடலில் 35 கிமீ தூரம் நீந்தி சாதனை படைத்துள்ளார். தேனியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் சினேகன் (14). இம்மாணவர் 2 முறை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

 இவர், வட அயர்லாந்து நாட்டில் உள்ள வடக்கு கால்வாய் கடலில் நார்த்தன் ஐலாந்து முதல் ஸ்காட்லாந்து வரையுள்ள கடலில் 35 கிமீ தூரத்தை பிரீ ஸ்டைல் முறையில் நீந்தி சாதனை படைக்க திட்டமிட்டார். இச்சாதனைக்காக கடந்த 2ம் தேதி வட அயர்லாந்து சென்ற மாணவர் சினேகன், 12 முதல் 15 டிகிரி வரை குளிர்ந்த நிலையில், கடல்நாய்கள், சிறிய ரக சுறாமீன்கள் நிறைந்துள்ள கடலில் நீச்சலடிக்க 10 நாட்களுக்கும் மேலாக பயிற்சி மேற்கொண்டார்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் அந்நாட்டு நீச்சல் பயிற்சியாளர்களுடன் தகுந்த பாதுகாப்புடன் கடலில் நீந்தினார். வட அயர்லாந்து நாட்டு நேரப்படி நேற்று காலை 6.30 மணிக்கு துவங்கி இரவு 9 மணிக்கு வட அயர்லாந்து முதல் ஸ்காட்லாந்து வரை சினேகன் கடலில் நீந்தினார். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் இதுவரை யாரும் 35 கிமீ தூரம் கடலில் நீந்தி சாதனை படைக்காத நிலையில் தேனியை சேர்ந்த மாணவர் சினேகன் நீந்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Theni ,Northern Ireland , Theni, Swimming, Snegan
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...