அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன்

சென்னை: அதிமுக அலுவலகம் முன்பு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது ஓபிஎஸ் தரப்பிற்கும், இபிஎஸ் தரப்பிற்கும் இடய்யே மோதல் ஏற்பட்டது இது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி தரப்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அதே நேரத்தில் தலைமை அலுவலகத்தில் 2 முறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவையை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் அதிமுக கலவர வழக்கில் தொடர்புடைய 64 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்தனர். கலவர வழக்கில் தொடர்புடைய 64 பேரும் சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் முன்பு கையெழுத்திட வேண்டும் எனவும் அதே நேரத்தில் அடையாறு புற்றுநோய் மையத்திற்கு ஒவ்வொருவரும் ரூ.20,000 வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தகத்து.

கலவர வழக்கில் தொடர்புடைய 64 பேரிடமும் விசாரணை நடத்த உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணையின் மூலம் கலவரத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் கலவரம் தூண்டப்பட்டவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெற உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: