×

சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பிரான்ஸ் அரசு: சாலைகளில் தனி வழித்தடம் ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு..!!

பாரிஸ்: நாடு முழுவதும் சைக்கிள் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக 1970 கோடி ரூபாய் மதிப்பில் பிரத்யேக திட்டங்களை பிரான்ஸ் செயல்படுத்த இருக்கிறது. சுற்றுச்சூழல் மேம்பாடு, எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றை கருதி சைக்கிள்களை பயன்படுத்துவதை பிரான்ஸ் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கு சைக்கிளை பயன்படுத்துவோருக்காக பிரத்யேக திட்டம் ஒன்றை பிரான்ஸ் அரசு தயாரித்துள்ளது. முதல்கட்டமாக தலைநகர் பாரிசில் செயல்படுத்தவுள்ள சைக்கிள் பயன்பாடு குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்துக்கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சரும், சுற்றுச்சூழல் அமைச்சர்கள், சைக்கிளேயே நிகழ்வுக்கு வந்தது அனைவரையும் கவர்ந்தது. இந்நிகழ்வில் பேசிய பிரதமர் எலிசபெத் போர்ன், தொடக்க பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் பழக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். கிராமப்புறங்களிலும் சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் தனி வழித்தடம் அமைப்பு, சைக்கிள் வாங்க நிதி உதவி உள்ளிட்ட திட்டங்களுக்கு அடுத்த ஆண்டு 1970 கோடி ரூபாய் செலவிடப்பட இருப்பதாக எலிசபெத் தெரிவித்தார்.

பிரதமர் எலிசபெத் 4 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த போதே சைக்கிள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. சாலைகளில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு சைக்கிள்களுக்கான தனி வழித்தடங்கள் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டுகளில் இருந்து மிதி வண்டிகளை வாங்குவதற்கும், பழுது பார்ப்பதற்கும் பிரான்ஸ் அரசு மானியம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Government of France , Bicycle use, French government, road, private route
× RELATED கவர்னர், முதல்வருடன் ஆலோசனை...