×

அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் எடப்பாடி அணி தீவிரம்: முட்டுக்கட்டை போடுமா ஓபிஎஸ் அணி?

சென்னை: அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எடப்பாடி  அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, பொதுக்குழு  உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த  முயற்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முட்டுக்கட்டை போடுவார்களா என்ற  கேள்வி எழுந்துள்ளது. அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி  நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக  தேர்வு செய்யப்பட்டார். அந்த கூட்டத்தில், விரைவில் பொதுச்செயலாளர்  தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான்  ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனது அனுமதி இல்லாமல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

அதை ரத்து செய்ய வேண்டும் என்று  சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த  நீதிபதிகள், எடப்பாடி அணியினர் நடத்திய பொதுக்குழு செல்லும் என்று  அறிவித்தனர். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுகவை  முழுமையாக கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சி செய்து வருகிறார். தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று  முன்தினம் டெல்லி சென்ற எடப்பாடி, அங்கு பிரதமர் மோடி, உள்துறை செயலாளர்  அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்தார்.

பிரதமர் மோடி, எடப்பாடியை சந்திக்க  மறுத்து விட்டார். அமித்ஷாவை மட்டும் எடப்பாடி சந்தித்து பேசினார்.  அப்போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரும் உடன்  இருந்தனர். இந்த சந்திப்பு வெறும் 15 நிமிடம் மட்டுமே நடைபெற்றது.  அதிமுகவின் உள்விவகாரத்தில் தலையிட அமித்ஷா மறுத்து விட்டதாக  கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரக்தி  அடைந்துள்ளனர். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றுவதுடன்,  பொதுக்குழுவில் அறிவித்தபடி பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி, அந்த  பதவியை அடைய வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்.

இதற்கான வேலையை தீவிரப்படுத்த தனது ஆதரவாளர்களுக்கு எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்குழு உறுப்பினர்களிடம்  கையெழுத்து வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான பொதுக்குழு  உறுப்பினர்கள் கட்சி தலைமைக்கு கோரிக்கை வைக்கும்பட்சத்தில், அதை ஏற்று  உடனடியாக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த எடப்பாடி அணியினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதிமொழி பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது. இதை இந்திய தேர்தல்  ஆணையத்திடம் வழங்கி, அதிமுகவில் தனக்கு தான் ஆதரவு அதிகம் உள்ளது என்பதை நிரூபிக்கும் பணியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தற்போது, அதிமுகவில் சுமார் 2,600 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 2,300க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக  உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், விரைவில் அவர்களிடம் கையெழுத்து வாங்கி, அதன்படி அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த எடப்பாடி  பழனிசாமி முயற்சி செய்து வருகிறார்.
அதேநேரம், எடப்பாடி பழனிசாமியின்  பொதுச்செயலாளர் பதவிக்கான கனவை முறியடிக்க ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக நீதிமன்றம் மற்றும் டெல்லியில் தாமரை தலைவர்கள் மூலம் ஓபிஎஸ் ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான்.

அந்த இடத்தில் எடப்பாடியை அமர வைக்கக்கூடாது  என்று அனைத்து மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மறைமுகமாக பேசி வருகிறார்கள். இதையும் மீறி, அதிமுகவில் பொதுச்செயலாளர்  பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொண்டர்கள் ஆதரவுடன் பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் போட்டியிடவும்  திட்டமிட்டுள்ளார். இதற்கு, எடப்பாடி அணியினர் எதிர்ப்பு தெரிவித்தால்  உடனடியாக நீதிமன்றம் சென்று அனுமதி வாங்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தவும்  அவர் திட்டமிட்டுள்ளார். மேலும், அதிமுக உள்கட்சி பிரச்னைகளை விளக்க  தமிழகம் முழுவதும் சென்று தொண்டர்களை நேரில் சந்தித்து பேசவும் ஓ.பன்னீர்செல்வம் விரிவான திட்டம் வகுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள்  தெரிவித்தனர்.

*  அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெற்றது.

* எடப்பாடி அணியினர் நடத்திய இந்த பொதுக்குழு செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது.

* தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

* பொதுச் செயலாளர் பதவியை பிடிக்க 2,600 பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டையை எடப்பாடி அணி நடத்துகிறது.

Tags : eddapadi ,general secretary , The Edappadi team is serious about getting signatures from the general committee members for the post of general secretary in AIADMK: Will the OPS team put a stop to it?
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக...