×

தமிழக அரசு அரசாணை வெளியீடு: பருவமழையை சமாளிக்க ரூ20 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை:  வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் தயார் நிலைப் பணிகளை மேற்கொள்வதற்காக, நீர் வளத்துறை துறையின் சார்பில் ரூ 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து நீர்வளங்கள் துறைச்  செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு  நீர்வளங்கள் துறையின் தலைமைப் பொறியாளர்(பொது) கடந்த 12.8.22ல் வெளியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளபடி, பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக 2022-2023ம் ஆண்டில் தயார்நிலைப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்களில் ரூ 20 கோடியில் தயார் நிலைப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் என்ன வகையான பணிகள் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி  காஞ்சிபுரம், கீழ்பாலாற்றங்கரை மண்டலத்தில் 19 பணிகள், திருவள்ளூர் கொற்றலை ஆற்றங்கரை பணிகள் 24, சென்னை ஆரணியாறு கரை மண்டலத்தில் 26 பணிகள், சென்னை கிருஷ்ணா நதிநீர் வினியோக திட்ட மண்டலத்தில் 3 பணி்கள் மேற்கொள்ளவும், கடலூர் வெள்ளாறு வட்டத்தில் 50 பணிகள் மேற்கொள்ளவும் திட்டமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, முன்னுரிமை அடிப்படையில் மேற்கண்ட பகுதிகளில் தயார் நிலைப் பணிகள் மேற்கொள்ள ரூ 20 கோடி நிதி அனுமதி வழங்க வேண்டும் என்று நீர்வளங்கள் துறை தலைமை பொறியாளர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரின் கடிதத்தை அரசு கவனமுடன் பரிசீலித்து மேற்கண்ட பணிகளுக்கு நிர்வாக மற்றும் நிதி அனுமதி அளித்து அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu Government , Tamil Nadu Government Ordinance Issued: Fund allocation of Rs 20 crore to deal with monsoon
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...