×

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் எளிதில் ஏறி, இறங்க அதிநவீன இணைப்பு பாலங்கள்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை விமானநிலையத்தில் விமானங்களில் பயணிகள் ஒரே நேரத்தில் ஏறி, இறங்குவதற்காக நிரந்தரமாக அதிநவீன இணைப்பு பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் விமானப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு, சர்வதேச முனையம், பழைய விமான நிலையம் ஆகிய அனைத்திலும் சேர்த்து மொத்தம் 110 விமானங்கள் நிற்கும் நிறுத்த மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றிலிருந்து 10 வரையில் பழைய விமானநிலையத்தில் அமைந்துள்ளது. அதில் விவிஐபிக்களின் தனி விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் நிற்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

மீதி 100 நிறுத்த மேடைகள் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் முதல் ஓடுபாதை, 2வது ஓடுபாதைகளில் அமைந்துள்ளன. இதில் 19வது நிறுத்த மேடையிலிருந்து 35வது நிறுத்த மேடை வரை உள்ள 17 நிறுத்த மேடைகளில் நிற்கும் விமானங்களில், பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஏரோ பிரிட்ஜ் வசதிகள் உள்ளன. மற்ற அனைத்திலும் திறந்தவெளி நிறுத்த மேடைகளாக உள்ளன. இதன் மேடைகளில் பயணிகள் ஏறி, இறங்குவதற்கு வசதியாக லேடர் எனும் நகரும் படிக்கட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படிக்கட்டுகளை மழை காலத்தில் வயதான பயணிகள் ஏறி, இறங்குவதற்கு பெரிதும் சிரமப்பட்டனர். இதனால் விமான புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டன.

இதையடுத்து, சென்னை விமானநிலைய பகுதிகளில் கூடுதல் ஏரோ பிரிட்ஜ் அமைக்க இந்திய விமானநிலைய ஆணையம் திட்டமிட்டது. இதை தொடர்ந்து, புதிதாக ரூ2400 கோடி மதிப்பில் 7 பிக்ஸ் லிங்க் பிரிட்ஜ்கள் எனும் நிரந்தர அதிநவீன இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டிடத்தில் 3, 2வது கட்டிடத்தில் 4 என மொத்தம் 7 அதிநவீன இணைப்பு பாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே ஏரோ பிரிட்ஜ் மூலம் இணைக்கப்பட்ட விமானத்தில் செல்ல வேண்டிய பயணிகள்தான் ஏறி, இறங்க முடியும். தற்போது புதிதாக அமைக்கப்படும் நிரந்தர அதிநவீன இணைப்பு பாலங்கள் பல்வகை விமானங்களுடன் இணைக்கப்பட்ட பாலங்கள் மூலம், ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்களை சேர்ந்த அதிக பயணிகள் அந்த நவீன இணைப்பு பாலங்களை பயன்படுத்துவதற்கான கூடுதல் வசதிகள் கிடைக்கும்.

Tags : Chennai airport , State-of-the-art connecting bridges for easy boarding and disembarkation of passengers at Chennai airport: officials inform
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...