×

முகப்பேரில் அதிகாலை கத்திமுனையில் மிரட்டி வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் அதிரடி கைது: வாகன சோதனையில் போலீசிடம் சிக்கினான்

அண்ணாநகர்: முகப்பேரில் அதிகாலையில் வியாபாரியை வழிமடக்கி கத்தி முனையில் மிரட்டி சரமாரியாக தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து பைக்கில் தப்பிய கொள்ளையன் வாகன சோதனையில் சிக்கினான். சென்னை முகப்பேர் சுற்றுவட்டார பகுதியில் ஒரு வாலிபர் பைக்கில் வந்து சாலையில் நடந்து செல்பவர்களை நோட்டமிட்டு அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, சரமாரியாக தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச்செல்வதாகவும், அதேபோல் தொடர்ந்து இரவு மற்றும் அதிகாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி ஜெ.ஜெ.நகர் ரவுண்ட் பில்டிங் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் திருமங்கலம் பாடிபுதூர் பகுதியை சேர்ந்த முருகன் (36) என்பவர் மது குடித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒரு வாலிபர் முருகனிடம் மது வாங்குவதற்கு பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். பணம் கொடுக்க மறுத்த முருகனை சரமாரியாக தாக்கி செல்போன் மற்றும் 500 ரூபாய், பைக்கை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து முருகன் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை வலைவீசி தேடி வந்தனர்.

இதற்கிடையே, நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் முகப்பேர் பகுதியை சேர்ந்த பிளாஸ்டிக் வியாபாரி பிரபாகரன் (31) முகப்பேர் ரவுண்ட் பில்டிங் அருகே நடந்து சென்றபோது அங்கு பைக்கில் வந்த ஒரு வாலிபர் வழி மடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை கேட்டுள்ளார், அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பிரபாகரனை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி விட்டு சட்டை பாக்கெட்டில் வைத்து இருந்த 500 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு பைக்கில் தப்ப முயன்றார்.

அப்போது, அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதை கண்ட வாலிபர், தப்ப முயன்ற போது போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். போலீசார் பிடியில் இருந்து தப்பி பைக்கில் இருந்து கீழே விழுந்து மீண்டும் ஓடினார். அவரை போலீசார் விரட்டி சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் ஜெ.ஜெ.நகர் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை திருமங்கலம் பாடிபுதூர் பகுதியை சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் பிரகாஷ் (எ) சாம்பார் பிரகாஷ் (25) என்பதும், இவர் மதுரவாயல், முகப்பேர், திருமங்கலம், நொளம்பூர் ஆகிய சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. போலீசாருக்கு பல மாதங்களாக தண்ணி காட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

* பல மாதங்களாக போலீசில் சிக்காமல் தண்ணி காட்டியவன்
போலீஸ் விசாரணையில் பிடிபட்ட வழிப்பறி ஆசாமி பிரகாஷ் மீது ஏற்கனவே மதுரவாயல், முகப்பேர், நொளம்பூர், ஜெ.ஜெ. நகர், கடலூர் மாவட்டம் ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி, செல்போன் திருட்டு, செயின்பறிப்பு, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பது போன்ற சுமார் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இவன் சென்னை மற்றும் புறநகரில் வழிப்பறியில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்காமல் பல மாதங்களாக தண்ணி காட்டி வந்துள்ளான். கைது செய்யப்பட்ட பிரபாகரனிடமிருந்து இரண்டு செல்போன்கள், பைக், ஒரு பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Kathimuna ,Mukappher , A notorious robber who robbed a dealer in Kathimuna in the early hours of Mukappher was arrested: He was caught by the police during a vehicle search.
× RELATED கஞ்சா வாங்கி தருவதாக ரூ50 ஆயிரம்...