சென்னை: கடந்த 15 மாதங்களில் மட்டும் 1,241 விளையாட்டு வீரர்களுக்கு ரூ36.04 கோடி அளவிற்கு ஊக்கத் தொகையினை வழங்கியுள்ள நிலையில் ஊக்க தொகையை குறைத்துள்ளதாக பொய்யான அரைகுறை அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முந்தைய ஆட்சிக்காலத்தில் கிடப்பில் போடப்பட்டு வழங்கப்படாமல் இருந்த ஊக்கத் தொகையையும் வெற்றி பெற்ற வீரர்களை கண்டறிந்து வழங்கி வரும் நிலையில், காழ்புணர்ச்சியுடன் பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
கடந்த 15 மாதங்களில் மட்டும் 1241 விளையாட்டு வீரர்களுக்கு ரூ36.04 கோடி அளவிற்கு ஊக்கத் தொகையினை முதல்வர் வழங்கி உள்ளார். இதில் 2016 முதல் 2020ம் ஆண்டு வரை சாதனை படைத்து, முந்தைய அரசால் எவ்வித ஊக்கத் தொகையும் வழங்கப்படாமல் வெற்று அறிவிப்போடு கைவிடப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கத் தொகையினை முதல்வர் வழங்கியுள்ளார். 2016 முதல் 2019 வரை பரிசு வென்றவர்களுக்கு அப்போது நடப்பில் இருந்த அரசாணையின் படியும் ஜீலை 2019க்குப் பிறகு பரிசு வென்றவர்களுக்கு அந்தக் காலகட்டத்தில் நடப்பில் இருந்த அரசாணையின்படியும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த காலகட்டத்தில் நடப்பில் இருந்த அரசாணையின்படி மட்டுமே ஊக்கத் தொகை வழங்க இயலும் என்பதால் போட்டிகளில் வெற்றிபெற்ற நாளுக்கு ஏற்ப ஊக்கத்தொகை மாறுபடுகிறது.
இந்த அடிப்படை உண்மையைக் கூட அவர் அறிந்திருக்கவில்லை என்பது வருந்தத்தக்கது. கடந்த ஆட்சியில் வழங்காத ஊக்கத் தொகையைக் கூட தற்போதைய அரசு வழங்கி வருவதை விளையாட்டு வீரர்கள் பாராட்டுவதை பொறுத்துக்கொள்ள முடியாமலும். முந்தைய ஆட்சிக் காலத்தின் மெத்தனத்தை மறைக்கவும், தற்போதைய ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தோடும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வெற்றுகாகித அறிக்கையானது, வீரர்கள், இளைஞர்கள், மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே மிகுந்த நகைப்புக்கு உள்ளாகியுள்ளது.