துலீப் கோப்பை பைனல் சரிவிலிருந்து மீண்டது மேற்கு: ஹெட் படேல் பொறுப்பான ஆட்டம்

கோவை: தென் மண்டல அணியுடனான துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் (5 நாள்), ஹெட் ஜிக்னேஷ் படேலின் பொறுப்பான ஆட்டத்தால் மேற்கு மண்டலம் சரிவிலிருந்து மீண்டது. எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற மேற்கு மண்டலம் முதலில் பேட் செய்தது. முன்னணி வீரர்கள் யாஷஸ்வி 1, பிரியங்க் பாஞ்சால் 7, கேப்டன் அஜிங்க்யா ரகானே 8 ரன்னில் வெளியேற, அந்த அணி 16 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. ஷ்ரேயாஸ் அய்யர் 37, சர்பராஸ் கான் 34 ரன்னில் வெளியேற, ஷாம்ஸ் முலானி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

மேற்கு மண்டலம் 101 ரன்னுக்கு 6 விக்கெட் என மீண்டும் சரிவை சந்தித்த நிலையில், ஹெட் படேல் உறுதியுடன் போராடி ரன் சேர்த்தார். அதித் ஷேத் 25 ரன், தனுஷ்கோடியன் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினர். மேற்கு 68.6 ஓவரில் 167 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து திணறியதால், 200 ரன்னுக்குள் ஆல் அவுட்டாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 9வது விக்கெட்டுக்கு ஹெட் படேல் - ஜெய்தேவ் உனத்கட் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் குவிக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்துள்ளது. ஹெட் படேல் 96 ரன் (178 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), உனத்கட் 39 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: