×

திருவனந்தபுரம் ஸ்டேடியத்தில் 4,000 இருக்கைகள் சேதம்: டிக்கெட் கட்டணம் உயர்வு

திருவனந்தபுரம்: உரிய பராமரிப்பு இல்லாததால் திருவனந்தபுரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் சேதமடைந்த நிலையில், டிக்கெட் கட்டணம் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா- தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி வரும் 28ம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள கிரீன் பீல்டு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இந்த ஸ்டேடியத்தில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன. ஒரு தனியார் நிறுவனம் தான் இந்த ஸ்டேடியத்தை பராமரித்து வந்தது. ஆனால், இந்த நிறுவனம் பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டது.  

இதையடுத்து கடந்த மூன்று வருடங்களாக ஸ்டேடியத்தில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் சேதமடைந்துள்ளன. இம்முறை 35 ஆயிரம் பேர் மட்டுமே ஸ்டேடியத்தில் அமர்ந்து போட்டியை பார்க்க முடியும். இருக்கைகள் குறைந்துள்ளதால் நஷ்டத்தை  ஈடுகட்ட டிக்கெட் கட்டணத்தை கேரள கிரிக்கெட் சங்கம் 50 சதவீதம் உயர்த்தியுள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி20 போட்டிக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,000ஆக இருந்தது. தற்போது ரூ.1500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டாலும், மூன்று நாட்களிலேயே 75 சதவீத டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாக கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.


Tags : Thiruvananthapuram Stadium , 4,000 seats damaged in Thiruvananthapuram Stadium: Ticket fare hike
× RELATED ரூ.2.5 கோடி மின் கட்டண பாக்கி...