×

அரசியல் சூழ்ச்சி மையமான கேரள கவர்னர் அலுவலகம்: முதல்வர் பினராய் விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரள கவர்னரின் அலுவலகம் அரசியல் சூழ்ச்சி மையமாக மாறி வருகிறது என்று முதல்வர் பினராய் விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும், முதல்வர் பினராய் விஜயனுக்கும் இடையே நேரடி மோதல் நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த 3 தினங்களுக்கு முன் கவர்னர் மாளிகையில் நிருபர்களுக்கு ஆரிப் முகம்மது கான் பேட்டியளிக்கும் போது கேரள அரசையும், முதல்வர் பினராய் விஜயனையும் கடுமையாக குற்றம்சாட்டி பேசினார். அதற்கு கண்ணூரில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பினராய் விஜயன் உடனடியாக பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது: அரசுடன் கருத்து வேறுபாடு இருந்தால் அதை கூறுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவர் வெளிப்படையாக அரசை குற்றம்சாட்டுவதால் தான் நானும் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையின் முடிவை நிராகரிக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்த ஒரு அமைப்புடனும் கவர்னர் தொடர்பில் இருக்கக் கூடாது. ஆனால் தனக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்பு உண்டு என்று கவர்னர் கூறியுள்ளார். அரசியலமைப்பின் உயரிய பொறுப்பில் இருக்கும் அவர் இப்படி கூறலாமா? கவர்னரின் அலுவலகம் அரசியல் சூழ்ச்சி மையமாக மாறி வருகிறது. இவ்வாறு அவர் அவர் கூறினார்.

* 5 மசோதாக்களில் கையெழுத்து
சமீபத்தில் நடந்த கேரள சட்டசபை கூட்டத் தொடரில் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கேரள கடல் சார் வாரிய சட்டத் திருத்த மசோதா, உள்ளாட்சி துறையின் பொது சேவை சட்ட திருத்த மசோதா உட்பட 5 மசோதாக்களில் கவர்னர் நேற்று கையெழுத்து போட்டார். மற்ற எந்த மசோதாக்களுக்கும் கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.


Tags : Kerala Governor ,Chief Minister ,Pinarayi Vijayan , Kerala Governor's office a center of political intrigue: Chief Minister Pinarayi Vijayan's allegation
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...