மேற்கத்திய நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை வெறும் உளறல் இல்லை அணுகுண்டு போடுவேன்: 3 லட்சம் வீரர்களை திரட்ட திடீர் உத்தரவு

மாஸ்கோ: ‘நான் உளறி கொண்டிருக்கவில்லை. தேவைப்பட்டால், அணுகுண்டு போடுவன்,’ என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை எச்சரித்துள்ள ரஷ்ய அதிபர் புடின், திடீரென 3 லட்சம் வீரர்களை திரட்டும்படி தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 6 மாதங்களை கடந்து நீடிக்கிறது. கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை ரஷ்ய நாட்டுடன் இணைக்க, பொதுமக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று இப்பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படைகள் அறிவித்துள்ளன. இந்த வாக்கெடுப்பு நாளை நடக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா சமீபத்தில் பின்னடைவை சந்தித்தது, புடினுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணமான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மீது அவர் கோபத்தில் இருக்கிறார். இந்நிலையில், ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றிய 3 லட்சம் வீரர்களை திரட்டும்படி தனது ராணுவத்துக்கு புடின் உத்தரவிட்டுள்ளார். மேலும், ‘நான் உளறவில்லை. தேவைப்பட்டால் அணுகுண்டுகளை பயன்படுத்த தயங்க மாட்டேன்,’ என்று நேற்று அவர் எச்சரிக்கை விடுத்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், தனது நாட்டின் மீது ரஷ்யா அணு ஆயுதம் பயன்படுத்துவதை உலக நாடுகள் அனுமதிக்காது என்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

* மோடிக்கு மேக்ரான் பாராட்டு

சமீபத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் மோடி சந்தித்து பேசியபோது, ‘இது போருக்கான காலம் இல்லை,’ என தெரிவித்தார். இதற்கு உலகளவில் ஆதரவ பெருகி வருகிறது. ஐநா பொதுசபை கூட்டத்தில் நேற்று உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல்  மேக்ரான், ‘உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு உலகை பிரித்துக் கொண்டிருக்கிறது. காலனி ஆதிக்க காலத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இது பற்றி இந்திய பிரதமர் மோடி பேசியதுதான் மிகவும் சரியானது,’’ என்றார்.

* புடின் நண்பர் வீடுகளில் ரெய்டு

ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமானவர் தொழிலதிபர் அலிஷர் உஸ்மானே. பொருளாதார தடைகளை மீறியது, பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில், ஜெர்மனியில் உள்ள இவருக்கு சொந்தமான 24 இடங்களில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

* அமெரிக்கா எதிர்ப்பு

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவான் கூறுகையில், ‘‘உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க பொது வாக்கெடுப்பு நடத்துவது, பிற நாடுகளின் ஒருமைப்பாட்டு கொள்கைகளை அவமதிப்பது போலாகும். உக்ரைனின் எந்த ஒரு பகுதியை இணைத்தாலும் அதை அமெரிக்கா ஒருபோதும் அங்கீகரிக்காது,’’ என்றார்.

Related Stories: