வியாசர்பாடியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்பிலான 8 கிரவுண்ட் இடம் மீட்பு: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

சென்னை: வியாசர்பாடியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான  ரூ.11 கோடி மதிப்புள்ள 8 கிரவுண்ட் இடத்தினை அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். சென்னை வியாசர்பாடியில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரவீஸ்வரர்  கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலம் பல்வேறு இடங்களில் உள்ளன. அதில் வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவில்  குளம் உள்பட 21 கிரவுண்ட் இடம் உள்ளது. கடந்த 25 வருடங்களாக இதில் 8 கிரவுண்ட் இடத்தை வீடு கட்டியும் மாட்டுத் தொழுவங்கள் கட்டியும் சுமார் 25 பேர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இதுகுறித்து 2018ம் ஆண்டு கோயில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறநிலையத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்து கோயில் இடத்தில் உள்ள நபர்கள் வெளியேற்றப்பட்டு, கோயில் இடத்தை  மீட்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.  

இதையடுத்து, நேற்று அறநிலையத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன் தலைமையில், தாசில்தார் காளியப்பன், செயல் அலுவலர் ஆட்சி சிவபிரகாசம்,  கோயில் மேலாளர் தனசேகர், வசூல் எழுத்தர் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அந்த இடம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்களை தவிர்க்க செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு தலைமையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.11 கோடி இருக்கும் எனவும் தொடர்ந்து இந்த இடம் இனி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும். யாரேனும் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: