பல்லாவரம் பிரதான சாலையில் முறிந்து விழும் நிலையில் மரக்கிளை: பொதுமக்கள் பீதி

பல்லாவரம்: பல்லாவரம் பிரதான சாலையில் முறிந்து விழும் நிலையில் உள்ள பட்டுப்போன மரக்கிளையால் விபத்து ஏற்படுவதற்குள் அதை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும். வாரச்சந்தைக்கு செல்லும் ஓல்டு டிரங்க் சாலை மிக முக்கிய சாலையாக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது, பல்லாவரம் பிரதான சாலை வழியாக பயணித்து, நெரிசலில் சிக்காமல் தவிர்த்து வருகின்றனர்.

மேலும் ஓல்டு டிரங்க் சாலையை சுற்றிலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள், வாகன பழுது பார்க்கும் ஒர்க்‌ஷாப்கள் மற்றும் பல்லாவரம் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமைதோறும் புகழ்பெற்ற வாரச்சந்தையும் நடக்கிறது. பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் பைக், கார், லாரி போன்ற வாகனங்களிலும், கால்நடையாகவும் பல்லாவரம் பிரதான சாலை வழியாக செல்கின்றனர்.

போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், சமீப காலமாக சாலையோரம் உள்ள ஒரு பெரிய மரத்தின் பட்டுப்போன கிளை எந்த நேரத்திலும் முறிந்துவிழும் நிலையில் அபாயகரமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அந்த வழியாக செல்பவர்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்லும் நிலையுள்ளது. பட்டுப்போன மரக்கிளை அருகிலேயே உயரழுத்த மின்கம்பிகள் செல்வதால், மரக்கிளை முறிந்து விழும் சமயத்தில், மிகப்பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, பட்டுப்போன மரக்கிளை முறிந்துவிழுந்து விபத்து ஏற்படுவதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: