திருமலையில் உள்ள இடங்களை கண்டறிய கூகுள் மேப் வசதியுடன் ‘க்யூ ஆர் கோடு ஸ்கேன்’: தேவஸ்தானம் ஏற்பாடு

திருமலை: திருமலையில் உள்ள இடங்களை பக்தர்கள் எளிமையாக தெரிந்து கொள்ளும் வகையில் ‘க்யூ ஆர் கோடு ஸ்கேன்’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் தங்கும் அறைகள் உள்ள இடத்துக்கு செல்லவும் விரும்பிய பகுதிகளை பார்க்கவும், சுவாமி தரிசனம், லட்டு பிரசாதம், உணவு கூடம் போன்றவற்றுக்கு செல்ல வழி தெரியாமல் தவிக்கின்றனர்.  இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தான பொறியாளர்கள், மக்கள் தொடர்புத்துறையினர் இணைந்து ‘க்யூ ஆர் கோடு ஸ்கேன்’ உருவாக்கியுள்ளனர்.

இதன்படி, திருமலைக்கு வரும் பக்தர்கள் ஆன்ட்ராய்டு போன் இருந்தால் யாரிடமும் கேட்காமல் எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் விதமாக இந்த க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்தால் உரிய இடத்தை கூகுள் மேப் வசதியுடன் செல்லும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள தனது அலுவலகத்தில் செயல் அதிகாரி தர்மா இந்த புதிய திட்டத்தை தொடங்கி பேசியதாவது:

திருமலையில் உள்ள தேவஸ்தானத்துக்கு தொடர்பான 40 துறைகள், விருந்தினர் இல்லங்கள், பக்தர்கள் ஓய்வறை, வைகுண்டம் காம்பளக்ஸ், லட்டு கவுண்டர்கள், மருத்துவமனை, காவல் நிலையங்கள், விஜிலென்ஸ் அலுவலகங்கள் போன்ற வழித்தடங்களை வழங்கவும் திருமலை பஸ் நிலையத்தில் இறங்கும் பக்தர்கள் அந்த பகுதியில் வைக்கப்பட்ட க்யூ ஆர் கோடில் அவர்கள் செல்ல விரும்பும் இடத்தை ஸ்கேன் செய்தால் கூகுள் மேப் வசதியுடன் சுலபமாக வழி காண்பிக்கும்.

இந்த சேவை பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திருமலையில் வாரி சேவா திட்டத்தில் சேவை செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் தன்னார்வலர்களுக்கும் இந்த க்யூ ஆர் கோடு ஸ்கேன் வசதி பயனுள்ளதாக இருக்கும். எனவே, பிரம்மோற்சவத்தில் பரிசோதனை முறையில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இஸ்லாமிய தம்பதி ரூ.1.2 கோடி நன்கொடை

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தொழிலதிபர்கள் உட்பட பல பக்தர்கள் கோடிக்கணக்கில் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தம்பதியான சுபினாபானு-அப்துல்கனி ஆகியோர் திருப்பதி கோயிலுக்கு ரூ.1.2 கோடி நன்கொடையாக வழங்கினர். இந்த நன்கொடை காசோலையை ஏழுமலையான் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் செயல் அதிகாரி தர்மாவிடம் வழங்கினர். இதில், எஸ்.வி.அன்னப்பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.15 லட்சமும் திருமலையில் சமீபத்தில் நவீனப்படுத்தப்பட்ட பத்மாவதி ஓய்வறையில் ரூ.87 லட்சத்தில் புதிய மரச்சாமான்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்கவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Related Stories: