×

வள்ளலாரின் முப்பெரும் விழாவினை முன்னிட்டு, இலட்சினை, தபால் உறை வெளியிட்டு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழகத்தில் ரூ.3000 கோடிக்கு மேலான அறநிலையத்துறையின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ரேவர் கருவி மூலம் அறநிலையத்துறை நிலங்களை அளவீடு செய்து வருகிறோம் எனவும் இந்து அறநிலையத்துறை சொத்துக்கள் யார் வசம் இருந்தாலும் அவை மீட்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.   

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில்  அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழா “வள்ளலார் – 200” என்ற தலைப்பில் 52 வாரங்கள்  சிறப்பாக நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2022-2023 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் அறிவிப்பில், உயிர்த்திறள் ஒன்றெனக்கூறி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானார் தருமசாலை துவக்கிய 156-வது ஆண்டு தொடக்கமும் (25.05.2022) வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கமும் (05.10.2022) ஜோதி தரிசனம் காட்டுவித்த 152 வது ஆண்டும் (05.02.2023) வரவிருப்பதால் இம்மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200-வது அவதார ஆண்டான அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா எடுக்கப்படும் இதற்கென ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவினை சிறப்புற நடத்திடும் வகையில் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. இச்சிறப்பு குழுவின் கூட்டத்தில்  “அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை, 52 வாரங்களுக்கு வள்ளலாரின் முப்பெரும் விழாவினை முக்கிய நகரங்களில் சிறப்பாக நடத்திடும் வகையில் செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன”.

அதனை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் வருகின்ற 05.10.2022 அன்று சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று (21.09.2022) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , துறை அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  
“முதலமைச்சர் அவர்கள் தலைமையில்  புதிதாக இந்த ஆட்சி பொறுப்பேற்றபின் இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தளவில் ஆன்றோர், சான்றோர் பெருமக்கள், நாட்டை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், தமிழ் வளர்த்த பெருமக்கள் அனைவருக்கும் விழா எடுப்பதும், அவர்கள் போற்றி பாதுகாத்த கொள்கைகளுக்கு மெருகூட்டுகின்ற வகையில் அவர்களின் நினைவாக பல்வேறு அடையாளங்களை ஏற்படுத்தியும் வருகிறது.

முதலமைச்சர் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார்கள். அதற்குண்டான ஆக்கபூர்வமான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. முதலமைச்சர் அவர்களிடம் சர்வதேச மைய வரைபடத்திற்கான ஒப்புதலை பெற்றபின், விரைவாக அப்பணிகள் துவக்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் வள்ளலாருக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அவர் வருவித்த நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அக்டோபர் 5 ஆம் தேதியை தனிப்பெருங்கருணை நாள் என முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.

சட்டமன்ற பேரவையில்,  வள்ளலார் இந்த உலகிற்கு வருவித்த நாளின்  200 வது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும், அவர் தர்மசாலை தொடங்கிய 156 ஆண்டு கொண்டாடுகின்ற வகையிலும், அதே போல் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152வது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும் முப்பெரும் விழா கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வின் தொடக்கமாக அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் வருகின்ற 05.10.2022 அன்று தமிழக முதலமைச்சர் பங்கேற்கின்ற மிகச் சிறப்பான விழா நடைபெற இருக்கின்றது.

வள்ளலாருக்கு எந்த ஆட்சியிலும் செய்யாத சிறப்பினை செய்திடும் வகையில் முதலமைச்சர் அன்றைய தினம் “வள்ளலார் – 200” என்ற இலட்சினை (லோகோ) மற்றும் தபால் உறையினை  வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைக்கின்றார். அதேபோல் வள்ளலாரின் முப்பெரும் விழாவினை தமிழ்நாடு முழுவதும் 52 வாரங்கள் நடத்திடும் வகையில் நிகழ்ச்சிக்கான முதற்கட்டத் திட்டத்தையும் வெளியிட இருக்கின்றார். இவ்விழாவில் முதலமைச்சர் நேரடியாக கலந்துக் கொண்டு தொடங்கி வைப்பதில் இந்து சமய அறநிலைத்துறை பெருமகிழ்ச்சி அடைகிறது. வள்ளலார் மீது மாறாத பற்று கொண்டிருக்கிற பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்க உள்ளார்கள் என்ற மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழாவினை இந்த அரசு தான் ஓராண்டு காலம் சிறப்பாக நடத்தியது. அதேபோல் வள்ளலாருக்கு சிறப்பு செய்யும் வகையில் 52 வாரங்கள் விழா எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதோடு, துறையை உற்சாகப்படுத்தி, முழு சுதந்திரம் அளித்து சிறந்த முறையில் நடத்திட அறிவுறுத்தியுள்ளார்கள். வள்ளலாரின் புகழ் மேலும் ஓங்கிட அவர் ஆற்றியிருக்கின்ற, நாட்டிற்காக விட்டுச் சென்றுள்ள தத்துவங்களை நிலை நிறுத்துவோம் என்று தெரிவித்தார்.

செய்தியாளர் கேள்வி : வக்பு வாரியம் வெளியிட்ட அதன் சொத்து பட்டியலில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சொத்துக்களும் உள்ளதாக கூறப்படுவது குறித்து.

அமைச்சர் பதில்: நிச்சயம் இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துக்கள் யார் கைவசம் இருந்தாலும் அதை மீட்பதற்கு இந்த அரசு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தயங்க மாட்டார்கள். அந்த வகையில் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சுமார் 3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை மீட்டு இருக்கின்றோம். நிருபர் கேட்ட கேள்வி ஏற்கனவே பத்திரிகை வாயிலாக நாங்கள் அறிந்திருக்கின்றோம். அது குறித்து விசாரிக்க சொல்லி துறையின் செயலாளர், ஆணையர் ஆகியோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றார்கள். அதற்குண்டான உரிய தகவல் பெற்ற பிறகு விரிவாக பதில் அளிக்கின்றேன்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துக்களை ரோவர் கருவியின் வாயிலாக தற்போது அளவிட்டு வருகின்றோம். இதுவரை சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இக்கருவியின் மூலமாக அளவிடப்பட்டு, பாதுகாப்பு வேலிகளை அமைத்து வருகின்றோம். இந்தப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. திருக்கோயில்களுக்கு லட்சக்கணக்கான ஏக்கர் சொத்துக்கள் இருப்பதால் அச்சொத்துக்கள் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்து, அந்த நிலங்களை பாதுகாக்கின்ற துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

திருக்கோயில்களின் ஒட்டுமொத்தமான சொத்துக்களின் பட்டியலை விரைவில் இந்து சமய அறநிலையத்துறை வெளியிடும். இந்த ஆட்சி வெளிப்படைத் தன்மையோடு செயல்படும் ஆட்சி என்பதால் இதில் ஒளிவு மறைவு என்பதே இல்லை. ஆக்கிரமிப்பை பொறுத்தளவில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உறுதியான துறை சார்ந்த நடவடிக்கைகள், நீதிமன்றங்களின் வாயிலாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை தொடர்ந்து தொய்வில்லாமல் இந்த அரசு எடுத்து வருகிறது.

இந்நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்,இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், எம்.கவிதா, சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள்  மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



--------------------------------------------------சுரேஷ் காளிப்பாண்டி



Tags : Vallalar ,festival ,Minister ,Shekharbabu , Vallalar Triple Jubilee, Letterhead, Postal Envelope, Minister Shekhar Babu Information
× RELATED கடலூர் மாவட்டத்தில் வள்ளலார்...