பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை விவகாரம்: புகாருக்குள்ளான 5 பேரும் ஊருக்குள் நுழைய தடை: மாவட்ட வன்கொடுமை நீதிமன்றம் உத்தரவு

திருநெல்வேலி: பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை விவகாரத்தில் புகாருக்குள்ளான 5  பேரும் ஊருக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பாஞ்சாங்குளம் கிராமத்தில் பள்ளி மாணவா்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்து தீண்டாமை காட்டியதாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. இது தொடர்பாக பெட்டிக் கடை உரிமையாளரான மகேஸ்வரன்(40), ராமச்சந்திரன் என்ற மூா்த்தி (22) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இதனை தொடர்ந்து சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவின்பேரில் தாசில்தார் பாபு மற்றும் அதிகாரிகள் மகேசுவரனின் கடைக்கு சீல் வைத்தனர். கிராமத்தைச் சுற்றி காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும், பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா, அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பனை நியமித்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, பாஞ்சாங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளிடையே பாகுபாடு காட்டப்படுவதாக புகாா் கூறப்பட்டது. இதுதொடா்பாக, அப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா்  ஆய்வு மேற்கொண்டாா்.

இது தொடர்பான வழக்கனது திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன், குற்றம் சாட்டப்பட்ட மகேஸ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் ஆகிய 5 பேரும் 6 மாதம் பாஞ்சாங்குளம் கிராமத்தில் நுழைய தடைவிதித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை ஊருக்குள் நுழைய தடை விதிப்பது இதுவே முதல்முறை ஆகும்.

Related Stories: