×

கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் தி.மலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 30ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் வரும் 30ம்தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு தீபத்திருவிழா வரும் நவம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி மகா தீபப் பெருவிழா நடைபெறுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக, வரும் 30ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அன்றைய தினம் அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் அருகே பந்தக்கால் முகூர்த்தமும் பின்னர் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெறும். பந்தக்கால் முகூர்த்தத்தை தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருவிழா உற்சவத்தில் வலம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், திருக்கோயில் பிரகாரங்கள் சீரமைப்பு பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெறும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலால், கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. விமரிசையாக 10 நாட்கள் நடைபெறும் சுவாமி மாடவீதி வலம், தேர் திருவிழா போன்றவையும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதால் இந்தாண்டு தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனால் பக்தர்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.

Tags : Karthikai Deepa festival ,Bandhakal ,Mugurtha ,Malai Annamalaiyar Temple , Karthikai Deepa Festival, Tiruvannamalai Annamalaiyar Temple, Bandhakal Mukurtham
× RELATED மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா: கொட்டகை முகூர்த்த விழா தொடக்கம்