
சென்னை: முன்னாள் அவைத்தலைவர் மதுசூதனை போல் அல்லாமல் தமது தியாகம் பெரியது என தமிழ்மகன் உசேன் விமர்சனம் செய்ததால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தற்போதைய அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பங்கேற்று பேசினார். அப்போது எம்ஜிஆருக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கியவன் தான் என்றும், திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேறியதும் புதிய கட்சி தொடங்க வேண்டும் என முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றியது தாம் தான் என்றும் தற்பெருமைகளாக பேசிக்கொண்டிருந்தார்.
இதன் உச்சகட்டமாக ஜெயலலிதா நியமனம் செய்த மதுசூதனை போல் அல்லாமல் தமது தியாகத்தை பார்த்து அவைத்தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி கொடுத்ததாகவும் கூறியதால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் என அறிவித்துவிட்டு, அவரது பணிகள் குறித்து தமிழ்மகன் உசேன் பேசாமல், தமது சுயபுராணத்தை மட்டுமே பேசியதால் அதிமுகவினர் முகம்சுளித்து வெளியேறினர்.