வேலூரில் குப்பை கொட்டும் இடமாக மாறிய வரலாற்று நினைவு சின்னம் துர்நாற்றத்துடன் கோட்டை அகழியில் செத்து மிதக்கும் மீன்கள்-அதிகாரிகள் அலட்சியம்

வேலூர் : வரலாற்று நினைவு இடமாக உள்ள வேலூர் கோட்டை அகழியில் குப்பை கொட்டும் இடமாறி உள்ளது. இதனால் மீன்கள் செத்து மிதக்கிறது. வேலூரில் வரலாற்று புகழ்மிக்க கோட்டை அமைந்துள்ளது. 133 ஏக்கர் பரப்பளவிலான கோட்டைக்கு ஒரே ஒரு நுழைவுவாயில் உள்ளது. கோட்டையை சுற்றிலும் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் கொண்ட அகழி அமைந்துள்ளது. ஏராளமான கோட்டைகளின் அகழிகள் தூர்ந்து போய்விட்ட நிலையில், வேலூர் கோட்டை இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஆனால் இந்த அகழி குப்பை, கழிவுகள் கொட்டும் இடமாக மாறியிருப்பது வேதனையான சம்பவமாகும்.

இந்நிலையில் வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹33 கோடி மதிப்பீட்டில் கோட்டையை சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மேம்படுத்தும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இரவு நேரத்திலும் கோட்டை அழகை ரசிக்கும் மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கோட்டையின் உட்புறம் நடைபாதை, குடிநீர் வசதி, கேன்டீன் வசதி, உணவருந்தும் வசதி, அலங்கார மின்விளக்குகள், ஒளி, ஒலி அரங்கம், கோட்டை அகழியை தூர்வாருதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதில் ஒரு சில பணிகள் மட்டும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில், கடந்த நவம்பர் மாதம் வேலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் கோட்டை அகழியில் நீர்மட்டம் உயர்ந்து, ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. கோயில் வளாகத்திற்குள் இருந்த நீரை மோட்டார் வைத்து வெளியேற்றும் பணிகள் நடந்தது. மேலும் அகழியில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாய் மூலம் நீர் வெளியேற்றும் பணிகள் நடந்தது. பல ஆண்டுகளாக அகழியின் மதகு திறந்து விடப்படாததால் அகழியில் உள்ள அழுக்குகள் மற்றும் சகதி வெளியேற முடியாமல் அகழியிலேயே தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில் அகழியில் கடந்த ஏப்ரல் மாதம் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.

இதனால் துர்நாற்றம் வீசியதால், வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து, இறந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வேலூர் மக்கான் பகுதியில் உள்ள உணவகம் மற்றும் கடைகளில் வெளியேற்றப்படும் கழிவுகள், குப்பைகள் அகழியில் கொட்டி விட்டு செல்கின்றனர்.

இதனால் அகழி நீர் மேலும் மாசடைந்துள்ளது. எனவே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ேகாட்டை அகழியில் குப்பைகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றாலும் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இனியாவது கோட்டையை சுற்றி கேமரா வைத்து, அகழியில் குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கேமராக்கள் வைத்து கண்காணிப்பதால் கோட்டையை இரவிலும் வெளிச்சமாக்கும் விளக்குகள் மற்றும் வயர்கள் திருடிச்செல்லும் கும்பலையும் பிடித்துவிடலாம் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அகழியில் புதிதாக விடப்பட்ட மீன்குஞ்சுக்களின் நிலை என்ன?

வேலூர் கோட்டை அகழியில் அடிக்கடி மீன்கள் இறந்து வருகிறது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அகழியில் உள்ள தண்ணீர் குறித்து ஆய்வு செய்வதில்லை. நாள்தோறும் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கிறது. அகழியில் மீன் பிடிக்க வரும் மீனவர்கள் அகற்ற விடுகின்றனர். இதனால் மீன்கள் இறப்பு குறித்து வெளியே வருவதில்லை.

இந்நிலையில், ஓரிரு நாட்களில் முன்பு மீன்வளத்துறை சார்பில் மோர்தானா அணையில் இருந்து கட்லா, ரோகு உள்ளிட்ட 3 ஆயிரம் மீன்குஞ்சுகளை கோட்டை அகழியில் வளர்க்க விட்டனர். ஏற்கனவே மீன்கள் செத்து மிதக்கும் நிலையில், புதிதாக விடப்பட்ட மீன் குஞ்சுகள் உயிரோடு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உண்மையிலேயே 3 ஆயிரம் மீன்குஞ்சுகள் அகழியில் விடப்பட்டதா என்பதும் தெரியவில்லை. கோட்டை அகழியில் போதிய பராமரிப்பு இல்லாததால், செத்து மிதக்கும் மீன்களால் அரசுக்கு வருவாய் பாதியாக குறைகிறது. கோட்டை அகழியில் மீன்கள் செத்து மிதப்பது தொடர்பாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு நடத்தி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.  

மழை வந்தால் கோயிலுக்கு தண்ணீர் செல்ல வாய்ப்பு

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைபோல், இந்தாண்டு ஆண்டும் கனமழை பெய்ததால், கோட்டை கோயிலுக்குள் தண்ணீர் செல்ல வாய்ப்பு உள்ளது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கோட்டை அகழியின் உபரி நீர் வெளியேறும் கால்வாயில் உள்ள அடைப்பை நீக்கி மதகை திறந்து பயன்பாட்டிற்கு ெகாண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: