தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணை: உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை:  தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணை செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானதிற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாகவும் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன. ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை 2 வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டது. இந்த வழக்கு தொடர்பான சோதனைகள் அனைத்தும் ஏற்கெனவே நடத்தப்பட்டிருந்தது.

 இந்நிலையில் இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் எஸ்.பி.வேலுமணி சார்பில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், வழக்குகள் அனைத்தும் நிலுவையில் இருந்து வந்தது. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்ற உத்தரவையும் பிறப்பித்திருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் பொறுப்பு தலைமை நீதிபதி முன்பு ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதன்படி பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி அமர்வு, வழக்கில் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் அமர்வில் நாளை விசாரணை செய்யப்படும் என நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று, இரு நீதிபதிகள் அமர்வு முன்பு ஆஜரான அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜராகி நேற்று பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி, இதுபோன்ற ஊழல் தடுப்பு வழக்குகளில் இடைக்கால நிவாரணம் வழங்கக்கூடாது என்றும், மேலும் இந்த வழக்கை நாளை பட்டியலிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு நாளை விசாரிக்கப்பட்டு, பட்டியலிடப்படும் என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணையானது நாளை தொடங்கவுள்ளது.

Related Stories: