×

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு முதுநிலை திருக்கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்கள் புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதோடு, சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2022 - 2023 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது, “திருக்கோயில்களில் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் நடைபெற்று வந்த ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மீண்டும் முதற்கட்டமாக 48 முதுநிலை திருக்கோயில்களில் சிறப்பாக நடத்தப்படும்“ என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு இறையன்பர்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக முக்கிய திருக்கோயில்களில் அந்தந்த மாவட்ட கலை பண்பாட்டுத்துறையினருடன் இணைந்து ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்திட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,  கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில், மதுரை, அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், இராமேஸ்வரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில், திருவொற்றியூர், அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோயில், மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், சென்னை, சூளை, அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களில் நவராத்திரி திருவிழாவின்போது ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வில்லுப்பாட்டு, கிராமிய கலை நிகழ்ச்சிகள் அந்தந்த திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படுகின்றது. நவராத்திரி திருவிழாவின்போது முக்கிய திருக்கோயில்களில் நடத்தப்படும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் இறையன்பர்களும், பொதுமக்களும் கலந்துக் கொண்டு சிறப்பு சேர்க்குமாறு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.



Tags : Navratri ,Masters ,Thirukoils ,Minister ,Segarbabu , Spiritual discourses, art programs will be held in senior temples on the occasion of Navratri festival: Minister Shekharbabu informs
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை