மதுரையில் பறக்கும் ரயில் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு: அறிக்கை மீது பரிசீலனை நடைபெறுவதாக CMRL தகவல்

சென்னை: மதுரையில் பறக்கும் ரயில் திட்டம் தொடர்பாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மீது பரிசீலனை நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. சென்னையை போலவே தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலும் பறக்கும் ரயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் பறக்கும் ரயில் சேவையை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை பறக்கும் ரயில் தொடக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்ட நிலையில், மே மாதம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் அந்நிறுவனம் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் திட்டத்தை உள்ளடக்கும் பகுதிகள், திட்டத்தின் செலவு மற்றும் நகரத்திற்கு ஏற்ற போக்குவரத்துக்கு அமைப்பின் வகை போன்ற பல தகவல்கள் உள்ளன. மதுரை பறக்கும் ரயில் திட்டத்திற்காக ஆராயப்பட்ட சீரமைப்புகளில் ஒன்று, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் இடையே உள்ளது.

இது தவிர பிற வழித்தடங்களும் பரிசீலிக்கப்படுகின்றன. இதுகுறித்து தகவல் அளித்துள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் மதுரையில் பறக்கும் ரயில் திட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சாத்தியக்கூறு அறிக்கை மீது பரிசீலனை நடைபெற்று வருவதாக கூறியிருக்கிறது. பரிசீலனை செய்யும் பணிகள் முடிந்த பிறகு இறுதி அறிக்கை விரைவில் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் CMRL தெரிவித்திருக்கிறது. இதையடுத்து மதுரையில் பறக்கும் ரயில் சேவை தொடங்கும், வாய்ப்பு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு விரைவில் சட்டமாற்றத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை மட்டுமின்றி சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய பிற நகரங்களிலும் பறக்கும் ரயில் சேவைக்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.   

Related Stories: