×

அடைப்பு ஏற்படுவதை தடுக்க கூவம் முகத்துவார பகுதியில் ரூ.70 கோடியில் தடுப்புச்சுவர்: அதிகாரிகள் தகவல்

சென்னை: கூவம் முகத்துவார பகுதியில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க ரூ.70 கோடியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கேசாவரம் எனும் சிற்றூரில் கல்லாறின் கிளையாறாக  உருவாகும் கூவம் ஆறு, 75 கிலோ மீட்டர் தூரம் கடந்து, சென்னை  நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி 400  சதுர கிலோ மீட்டர். ஆற்றுப் படுக்கையின் அகலம் 40 முதல் 120 மீட்டர் வரை.  ஆற்றின் அதிகபட்ச கொள்ளளவு நொடிக்கு 22,000 கன அடி.புறநகரில் 40 கிலோ மீட்டரும், நகருக்குள் 18 கிலோ மீட்டரும் ஓடுகிறது. 2004  டிசம்பர் சுனாமியின் போது இந்த ஆறு ஒரு வடிகாலாகச் செயல்பட்டதால் சென்னை நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளாகாமல் தப்பித்தது. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கூவம் ஆற்றில் இருந்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்தது.

மேலும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக 24 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்தது. ஆனால் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் மாசுகளால் முகத்துவார பகுதி முற்றிலும் அடைபடுகிறது. இதனால் கூவம் வழியாக தண்ணீர் முழுமையாக கடலில் சென்று சேருவதில் சிக்கல் ஏற்பட்டு, வெள்ளப்பெருக்கு ஏற்படுகிது. இதை தடுக்க கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் ரூ.70 கோடி செலவில் தடுப்புச்சுவர் கட்ட நீர் மேலாண்மை வாரியம் முடிவு செய்து, இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. முகத்துவாரத்தின் வடக்கு பகுதியில் 260 மீட்டர் நீளத்திலும், தெற்கு பகுதியில் 310 மீட்டர் நீளத்திலும் இந்த தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது.

முகத்துவாரத்தில் தண்ணீர் வந்து சேரும் இடத்தில் மட்டும் சிறந்த வழியாக விடப்படுகிறது. இந்த சுவர் கற்பாறைகளை கொண்டு கான்கிரீட் மூலம் மிகவும் பலமானதாக கட்டப்படுகிறது. இந்த சுவரை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்துள்ளது. முதற்கட்டமாக, இந்த சுவர் கட்டுவதற்கு கடல் சார் வாரியத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த சுவர் கட்டுமான பணி விரைவில் தொடங்கப்பட்டு, 18 மாதத்தில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Kouvam Muthatwara , Rs 70 crore retaining wall in Koovam estuary to prevent blockage: Officials informed
× RELATED தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில்...