நன்னடத்தை பிணையை மீறிய 2 ரவுடிகளுக்கு 363 நாள் சிறை: துணை கமிஷனர் உத்தரவு

சென்னை: நன்னடத்தை பிணையை மீறி பெண் ஒருவரை கொலை செய்ய முயன்ற 2 ரவுடிகளை 363 நாட்கள் சிறை தண்டனை வழங்கி தி.நகர் துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். தேனாம்பேட்டை கார்பரேஷன் காலனியை சேர்ந்தவர் கவுதம் (எ) குண்டு கவுதம் (24). இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஐஐடி காலனியை சேர்ந்த சதீஷ் (எ) தீஞ்ச சதீஷ் (25) மீது வழிப்பறி உட்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜூலை 19ம் தேதி ரவுடிகள் கவுதம் மற்றும் சதீஷ் ஆகியோர் தி.நகர் துணை கமிஷனர் ஆதர்ஷ் பச்சேரா முன்பு ஆஜராகி, ஒரு வருட காலத்திற்கு எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டோம், என்று நன்னடத்தை உறுதி மொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தனர்.

ஆனால் அதை மீறி கடந்த ஜூலை 25ம் தேதி கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காகவும், கடந்த 6ம் தேதி பெண் ஒருவரை தாக்கி காலை செய்ய முயன்ற குற்றத்திற்காகவும் ரவுடிகள் கவுதம் மற்றும் சதீஷ் ஆகியோரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். நன்னடத்தை பிணை பத்திர உறுதி மொழியை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடிகளான கவுதம் மற்றும் சதீஷை தேனாம்பேட்டை போலீசார் செயல்முறை நடுவராகிய தி.நகர் துணை கமிஷனர் ஆதர்ஷ் பச்சேரா முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது 2 ரவுடிகளுக்கும் நன்னடத்த பிணை நாட்களை கழித்து கவுதமுக்கு 358 நாட்களும், சதீசுக்கு 363 நாட்களும் பிணையில் வெளியே வர முடியாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதைதொடர்ந்து போலீசார் 2 ரவுடிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: