×

ஓரிக்கை பாலாறு பாலத்தில் மீண்டும் ஒளிருமா மின் விளக்குகள்: பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு மார்க்கமாக செல்லும் மேல் ரோடு, உத்திரமேரூர் மார்க்கமாக செல்லும் கீழ் ரோடு ஆகிய இரண்டு சாலைகளிலும் செவிலிமேடு மற்றும் ஓரிக்கை அருகே பாலாற்றில் சுமார் 1 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில், ஓரிக்கை அருகே உள்ள பாலாறு மேம்பாலத்தில் உள்ள பெரும்பாலான மின் விளக்குகள் சரியாக எரியாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், ஓரிக்கை பாலாற்றின் குறுக்கே, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த உயர்மட்ட பாலத்தின் வழியாக, குருவிமலை, களக்காட்டூர், ஆற்பாக்கம், மாகரல், வெங்கச்சேரி, உத்திரமேரூர் உள்ளிட்ட பல ஊர்களுக்கு, வாகனங்கள் சென்று வருகின்றன.

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெரும்பாலான மக்கள் பைக்கில் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த பாலாறு மேம்பாலத்தின் வழியாக காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். மேலும், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் சென்று வருகின்றன. இந்த பாலத்தின் இருபுறமும் தலா 16 மின் விளக்குகள் என மொத்தம் 32 மின் விளக்குகள் உள்ளன. இதில், பெரும்பாலான மின் விளக்குகள் சரிவர எரியாததால் இரவு நேரங்களில் பாலத்தின் வழியாக கடந்து செல்வது அச்சத்தைத் தருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் இந்த மின்கம்பங்கள் உடைந்தும், மின் இணைப்பு பெட்டிகள் திறந்த நிலையில் ஆங்காங்கே காணப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் தெரிவித்ததாவது; ‘கடந்த 6 மாதத்திற்கு முன்பு மின்விளக்குகள் எரியாததை சுட்டிக்காட்டி அதிகாரிகளிடம் மனு அளித்தோம்.

பழுது நீக்கி விட்டு சென்றார்கள். சில நாட்களே எரிந்த மின்விளக்குகள் மீண்டும் எரியவில்லை. மேலும், மேம்பாலத்தை ஒட்டி இணைப்பு பகுதியில் மரக்கிளைகளின் நடுவில் மின் விளக்குகள் உள்ளன. இதனால், சாலையில் சரிவர வெளிச்சம் தெரிவதில்லை. எனவே, பாலத்தில் உள்ள மின் விளக்குகள் பழுதுநீக்கி எரியச் செய்வதுடன், இணைப்பு பகுதியில் சாலையோரங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றிவிடவேண்டும்’ என்று தெரிவித்தார். ஏராளமான வாகனங்கள், பொதுமக்கள் பைக்குகளில் சென்று வரக்கூடிய இந்தச் சாலையில் பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை எரியச் செய்ய வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Orikai Palaru Bridge , Orikai Palaru Bridge to re-flash electric lights: public expectations
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...